பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய நோட்டீசுக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளிக்காத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 1-ந் தேதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
பாமகவின் பாட்டாளி சமூக ஊடக பேரவை ஆலோசனை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 31) தைலாபுரத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இன்று பாட்டாளி சமூக ஊடக பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 60 பேர் பங்கேற்றனர்.

இதில், சமூக வலைதளங்களில் சுற்றுப்புற சுகாதாரம், விளையாட்டு, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் நாகரீகம் கருதி நல்ல தகவல்களை மட்டும் பதிவிடுமாறு டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தினார்.
இன்றைய கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி சமூக ஊடக பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார், அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய நோட்டீஸ் காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதனால் செப்டம்பர் 1-ந் தேதி மீண்டும் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி ஆலோசிக்க உள்ளது என்றார்.