தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த இருந்தநிலையில், தந்தையை மகனே வேவு பார்த்திருக்கிறார் என்று அன்புமணி மீது ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலைவி வரும் நிலையில், இருவரும் ஆளுக்கு ஒரு தேதியில் பொதுக்குழுவை அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று (ஆகஸ்ட் 2)செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “பாமக நான் உருவாக்கிய கட்சி. வியர்வை சிந்தி 96,000 கிராமங்களுக்கு சென்று உருவாக்கிய கட்சி. அதற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது.
நான் 17ஆம் தேதி பொதுக்குழு அறிவித்திருக்கிறேன். செயல் தலைவர் என்று என்னால் அறிவிக்கப்பட்ட அன்புமணி 9ஆம் தேதி பொதுகுழு அறிவித்திருக்கிறார். இது கட்சி சட்ட விதிகளுக்கு புறம்பானது.
ஒரு பொதுக்குழு கூட்டப்பட வேண்டுமானால், 15 நாட்களுக்கு முன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கை அனுப்ப வேண்டும் அதனால் 17ஆம் தேதி இந்த பொதுக்குழுவை அறிவித்திருக்கிறேன்.
எனவே வேறுயாரேனும் பாமக பெயரில் பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு புறம்பானது.
உலகத்தில் தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருப்பார்களா? என்னை வேவு பார்த்திருக்கிறார். இது சம்பந்தமாக கிளியனூர் காவல்துறை இன்ஸ்பெக்டரை வரவழைத்து புகார் கொடுத்தேன். சைபர் கிரைமிடமும் புகார் கொடுத்தேன்.
அந்த கருவின் சிப், மோடம் எல்லாம் ஒப்படைத்திருக்கிறோம். நானும் ஒரு ஸ்பெஷல் ஏஜென்சியை அமர்த்தி, இது எங்கிருந்து யாரால் இயக்கப்பட்டது என்று ஆய்வு செய்ய சொல்லியிருக்கிறேன்.
இந்த பிரைவேட் எஜென்சியை அமர்த்தியது காவல்துறைக்கு உதவுவதற்காகத்தான்’ என்றார்.
நீங்கள் ஒரு அறிவிப்பு வெளியிட்டால், செயல் தலைவர் அன்புமணி ஒரு அறிவிப்பு வெளியிடுகிறாரே… அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யை சொல்கிறார்.
தேர்தல் நெருங்குவதால் கட்சியை பலப்படுத்துவதற்காக 108 மாவட்ட செயலாளர்களை என் வீட்டுக்கு அழைத்தேன். அதிகாலை 3 மணி வரை சுமார்100 பேருக்கு போகாதே, போகாதே என்று அன்புமணி சொல்லியிருக்கிறார். அவர்கள் வரவில்லை. 8 பேர்தான் வந்தனர்.
அந்த 100 பேரும் நான் போட்ட ஆட்கள். என்னை பார்க்க கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதனால் அந்த 100 பேரையும் நீக்கி, நன்கு செயல்படக்கூடிய கட்சியின் முன்னோடிகள் 100 பேரை நியமித்தேன்” என்றார்.
மேலும் அவர், பூம்புகாரில் இந்த மாதம் 10ஆம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் 3 லட்சம் மகளிர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறினார்.