பாமகவில் இருந்து தாம் நீக்கப்படுவது உறுதியான நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தமது ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுடன் பாமக (செயல்) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். Anbumani Ramadoss
‘ராமதாஸ்’ பாமகவின் செயற்குழு கூட்டம் ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாமகவின் செயல் தலைவரான அன்புமணியை கட்சியில் இருந்தே நீக்கும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், எப்போதும் இடம் பெறக் கூடிய ‘செயல் தலைவர் அன்புமணி’ என்பது இடம் பெறவில்லை.
இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் தமது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அன்புமணியைப் பொறுத்தவரையில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகார கடிதத்தின்படி 2026-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி வரை தாமே பாமக தலைவர் என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் அண்மையில் டெல்லி பயணத்தின் போது நடத்தப்பட்ட சந்திப்புகளாலும் ‘ஒரிஜனல்’ பாமக என்ற அங்கீகாரம் தமக்குதான் கிடைக்கும் என பெரும் நம்பிக்கையோடு இருக்கிறார் அன்புமணி.
இந்த நிலையில் அன்புமணியை அதிகாரப்பூர்வமாக கட்சியில் இருந்து நீக்கினால் அடுத்ததாக நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு பாமக விவகாரம் செல்லும் என்பதும் உறுதியாகி இருக்கிறது.