பாமகவுக்கு உரிமை கோரி டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனு கொடுக்க உள்ளார். PMK Anbumani Ramadoss
பாமகவின் நிறுவனராக டாக்டர் ராமதாஸ், தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தனர். பாமகவின் தலைவராக அன்புமணி முறைப்படி, அக்கட்சியின் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அண்மையில் ராமதாஸ்- அன்புமணி இடையேயான மோதலில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவர் செயல் தலைவர் மட்டுமே என அறிவித்தார் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். மேலும் பொதுக்குழுவால் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்தும் விட்டது என்றார் ராமதாஸ்.
இதனை நிராகரித்த அன்புமணி, 2026-ம் ஆண்டு வரை பாமகவின் தலைவராக தாம் நீடிக்க தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கி இருக்கிறது என்றார். அத்துடன், பாமகவின் சட்ட விதிகளின் படி கட்சியின் நிறுவனர், பொதுக்குழுவுக்கு அழைக்கப்படுகிற வழிகாட்டிதானே தவிர எந்த ஒரு அதிகாரமும் கொண்டவர் அல்ல என விளக்கம் அளித்தார் அன்புமணி.
இந்த பின்னணியில்தான் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாமகவுக்கு உரிமை கோரி அன்புமணி ராமதாஸ் இன்று மனு அளிக்கிறார்.

பாமகவின் சட்ட விதிகள் சொல்வது என்ன?
பாமகவின் சட்ட விதிகள் அனைத்தும், ” பாட்டாளி மக்கள் கட்சி அமைப்புச் சட்டம்” என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. 1989-ம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட இந்த சட்ட விதிகளின் புத்தகம், 1995-ல் திருத்திய பதிப்பாகவும் வெளியிடப்பட்டது.
பாமகவின் சட்ட விதிகளில் தலைவர், பொதுக்குழு, நிறுவனர் தொடர்பாக இடம் பெற்றுள்ள அம்சங்கள்:
பாமக கட்சி சட்ட விதிகள் 12 (பிரிவு 1) பொதுக்குழு
பொதுக்குழு, அனைத்து மாவட்டத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர், அனைத்து ஒன்றிய நகர, நகரிய, மாநகர மாவட்டத்தின் பகுதிச் செயலாளர்கள் மற்றும் மொழி, இனம், மதவாரிச் சிறுபான்மையர், ஆதித் தமிழர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்ட்டி) ஆகியோரின் பகராளியம் (பிரதிநிதித்துவம்) கிட்டாதோருக்கு, பிரிவுக்கு ஒருவர் மேனி நிறுவனர் ஒப்புதலோடு, மாநிலத் தலைவரால் பரிந்துரை செய்யப்பட்டு, பொதுச்செயலாளரால் அமர்த்த உறுப்பினர் எண்ணிக்கை பத்துக்கு மேல் போகக் கூடாது.

பிரிவு 3: மாநில பொதுக்குழு, ஆண்டுக்கு ஒரு முறையும் செயற்குழு 4 மாதங்களுக்கு ஒரு முறையும் கூட்டப்பட வேண்டும்.விதி 13: நிறுவனர்
கட்சியின் மாநிலப் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக் குழு ஆகியவற்றின் கூட்டங்களுக்கு நிறுவனர் அழைக்கப்பட்டு, அவரது வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

விதி 15: தலைவர்
பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சித் தலைவர், கட்சியின் அரசியல் தலைமைக் குழு, செயற்குழு, பொதுக் குழு, மாநில மாநாட்டுக்கு தலைமை ஏற்பார். கட்சித் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரின் கூட்டுப் பொறுப்புகளுடன் கட்சியின் நிதி, சொத்து, வங்கிக் கணக்கு முதலானவற்றை நிருவகிக்கும் தலைமைப் பொறுப்பு கட்சித் தலைவருக்கு உரியதாகும்.
விதி 26
பிரிவு 2 கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொதுத் தேர்தல் இயல்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
பாமகவின் சட்ட விதிகளின்படி, நிறுவனர் (டாக்டர் ராமதாஸ்) பொதுக்குழு கூட்டங்களுக்கு அழைக்கப்படக் கூடிய வழிகாட்டி மட்டுமே; பாமகவின் தலைவர் (அன்புமணி) கட்சிக்கான அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.
இதனையே தேர்தல் ஆணையத்திலும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டி, பாமகவுக்கு உரிமை கோர இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.