தன்னை விமர்சித்த பாமக தலைவர் அன்புமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கரூரில் நடந்த தவெக விரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும், கரூர் அரசு மருத்துவமனைக்கும் சென்று அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
நேற்று கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறுதல் தெரிவித்தார்.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 29) விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியிடம் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ’இதில் பல்வேறு வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. உண்மை தெரிய வேண்டும் என்றால் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது சூழ்ச்சியா இல்லை விபத்தா என தெரிந்துகொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சிய்ல் 68 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள். அங்கு முதல்வர் உட்பட எந்த அமைச்சர்களும் போகவில்லை. ஆனால் தனி விமானம் பிடித்து அதிகாலை 3 மணிக்கு கரூர் வருகிறார் முதல்வர் ஸ்டாலின், பொதுவாக பிரேத பரிசோதனை காலையில் தான் செய்வார்கள். ஆனால் இரவே முதல்வர் வருவதற்கு முன்பாக 30 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்னொரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் விருதுதான் கொடுக்க வேண்டும். ஒரு துயர சம்பவத்தில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்று கூறினார்.
இந்நிலையில், தன்னை விமர்சித்த அன்புமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
இன்று (செப்டம்பர் 29) அவர் தனது எக்ஸ் பதிவில், “ அண்ணன் அன்புமணி நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
முதலமைச்சர் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.
வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.