தேர்வை பார்த்து எழுதினால் அறிவை எப்படி வளர்க்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகு 75 சதவிகிதம் வருகைப்பதிவு கட்டாயம் என்று அறிவித்தது.
இந்தநிலையில், ‘திறந்த புத்தகத் தேர்வு’ என்ற முறையை கொண்டு வரவுள்ளது. இந்த தேர்வு முறை 2026ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
9ஆம் வகுப்பில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம்.
மனப்பாடம் செய்வதிலிருந்து திறன் அடிப்படையிலான கற்றலுக்கு மாணவர்களை மாற்ற வேண்டும் என்ற பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் வலியுறுத்தல்படி இந்த மாற்றம் கொண்டு வருவதாக சிபிஎஸ்இ கூறுகிறது. இந்தத் தேர்வுகள் கிடைக்கக்கூடிய தகவல்களைச் செயலாக்கம் அல்லது பயன்படுத்தும் திறனை மதிப்பிடுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே ‘பைலட் திட்டம்’ என்ற பெயரில் புத்தகத்தை பார்த்து எழுதும் முறையை சோதனை முயற்சியாக சிபிஎஸ்இ மேற்கொண்டது. மாணவர்களின் செயல்திறன் பகுப்பாய்வில் 12% முதல் 47% வரையிலான மதிப்பெண்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தசூழலில் தான் 9 வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வெழுத அனுமதிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 11) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “தேர்வை பார்த்து எழுதினால் அறிவை எப்படி வளர்க்க முடியும்” என்று பதிலளித்தார்.