தமிழில் எடுக்கப்படும் பல படங்கள் எதற்காக எடுக்கப்படுகின்றன? யாரைக் குறி வைத்து எடுக்கப்படுகின்றன என்பது பல,சமயம் புரியவே புரியாது.
ஏமாற்றியவர் யார் யார்? ரசிகர்கள் உட்பட ஏமாந்தவர்கள் யார் யார்? என்பது எல்லாம், படம் ரிலீஸ் ஆகும் வரை கூடத் தெரியாது .
ஆனால் தெலுங்கு கன்னடம் மலையாளத்தில் எடுக்கப்படும் படங்கள் யாவும் தமிழ் நாட்டையும் குறி வைத்தே எடுக்கப்படுகினறன . வெளியாகும் பல தமிழ் சினிமாக்களின் யோக்கியதை என்ன என்று அவர்களுக்கே தெரிகிறது .
அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி தமிழ்நாட்டிலும் ரிலீஸ் ஆகும் படம் ’45 ‘
கன்னட சினிமா உலக சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி,சுதாராணி, பிரமோத் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் இசையமைப்பாளராக புகழ் பெற்று தற்போது இந்தப் படம் மூலம், இயக்குனராகவும் அறிமுகமாகும் அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் தயாராகி வரும் படம் 45.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்தப் படத்துக்காக எம் ஜி ஆர் சரோஜாதேவி நடித்த அன்பே வா படத்தில் இடம்பெற்ற ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடல் மீண்டும் ஒருமுறை ரீமிக்ஸ் ஆகிறது.
ஒரு மாற்று மொழிப் படக்குழு தமிழ் ரசிகர்களை கவர எப்படி எல்லாம் திட்டம் போடுகிறது பாருங்கள் . இதில் பாதி கூட நம்ம ஊர் படைப்பாளிகள் செய்வது இல்லை என்பதுதான் அநியாய ஆபத்து.
காவல் துறையைக் கவுரவிக்கும் படமாம் இது.
இயக்குநர் அர்ஜுன் ஜன்யா, “. இன்றைய காலத்தில் நாம் மறந்துவிட்ட சில உண்மையான மதிப்புமிக்க விஷயங்களை இந்தப் படம் அழுத்தமாக பேசுகிறது. அவற்றை உணர்ந்தால் நம் ஒவ்வொரு இல்லமும் ஒளிரும். “என்கிறார்.
நாயகன் சிவராஜ்குமார், ’45’ என் 129வது படம். என் முதல் படமான ‘ஆனந்த்’ செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும் எனக்கு இருந்தது. அர்ஜுன் ஜான்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என மிகவும் ஆச்சரியப்பட்டேன். ‘45’ என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும். இது ஒரே மனிதனின் கதை அல்ல, அனைவரையும் இணைக்கும் படம். கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கியபோது, நான் புற்று நோய்க்கான சிகிச்சையான கீமோதெரபியில் இருந்தேன்.
ஒரு இயக்குனர் உருவாக்கியதை கலைஞன் முழுமையாக செய்தால்தான் அதற்கு மதிப்பு கிடைக்கும் – அது டூயட் பாடலாக இருந்தாலும், கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும்” என்கிறார்.
அதுதான் அர்ப்பணிப்பு.
— ராஜ திருமகன்
