தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய்யின் தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்ற எண் 855/2025 பிரிவு 105,110,125 (b)r, 223 r/w 3 of,TNPPDL Act கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் A1 மாவட்டச் செயலாளர் மதியழகன், A2 பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,A3 நிர்மல் குமார் மற்றும் பலர் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கில் கருர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1 ல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான போலீசார் சம்பவ இடத்தில் இல்லை. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
விஜய் பிரச்சாரத்தின்போது சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் இல்லாமலேயே ஆம்புலன்ஸ் விஜய் கூட்டத்திற்குள் வந்ததாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் குற்றம் சாட்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.