ஜன் சுராஜ் கட்சி ஆதரவாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் ஆனந்த் குமார் சிங், மோகமா தொகுதியில் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளார்.
பீகாரில் தேர்தல் நடைபெற்ற 243 தொகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது மோகமா தொகுதி. இந்த தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஆனந்த் குமார் சிங் போட்டியிட்டார். ஆர்ஜேடி வேட்பாளராக முன்னாள் எம்.பி.வீணா தேவியும், ஜன சுராஜ் கட்சி வேட்பாளராக பிரியதர்ஷி பியூஷ்ம் களம் கண்டனர்.
பீகாரில் முதல் கட்ட தேர்தலில் மோகமா தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் கொலை வழக்கில் சிறையில் இருந்தவாறே ஆனந்த் குமார் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் இறுதி சுற்றில், ஆனந்த் குமார் சிங் 91,416 வாக்குகளைப் பெற்றார். ஆர்ஜேடி வேட்பாளரான வீணா தேவி 63,210 வாக்குகளைப் பெற்றார். இந்நிலையில் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் ஆனந்த் குமார் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷி பியுஷை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட துலர் சந்த் யாதவ் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆனந்த் குமார் சிங் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
பூமிஹார் சாதி வாக்கு வங்கியைத் திரட்டுவதில் சக்திவாய்ந்தவர் அனந்த் குமார் சிங், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், கொலை முதல் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளில் தொடர்ந்து சிக்கி இருந்தவர்.
2000களின் முற்பகுதியில் நிதீஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த ஆனந்த் குமார் சிங்கின் அரசியல் வாழ்க்கை வேகமெடுத்தது
இவர் கடந்த 2005, 2010ல் ஐக்கிய ஜனதா தளம் சார்பிலும், 2015ல் சுயேச்சையாகவும், 2020ல் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ வாக வெற்றி பெற்றார்
வழக்குகள்
ஆனந்த் குமார் சிங் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜூன் 2022 இல், AK-47 துப்பாக்கியை வைத்திருந்தது தொடர்பாக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2024 ஆம் ஆண்டில், ஆயுதச் சட்ட வழக்கில் இருந்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
2022 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சட்டமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி நீலம் தேவி ஆர்ஜேடியின் சீட்டில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
இப்போது 2025 ஆம் ஆண்டில் ஐக்கிய ஜனதாதளம் மீண்டும் ஒருமுறை ஆனந்த் சிங்கிற்கு மோகமா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கியுள்ளது.
சொத்து மதிப்பு
ஆனந்த் குமார் சிங் கடந்த மாதம் வேட்புமனுவை தாக்கல் செய்தபோது, தனக்கு ரூ 37.88 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், அவரது மனைவிக்கு ₹ 62.72 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் அறிவித்திருந்தார் .
