முனைவர். ச.குப்பன்
பொதுவாக இந்தியாவின் உயிரோட்டம் அதன் கிராமங்களின் அடிப்படையிலேயே இருக்கின்றது எனக் கூறுவார்கள். ஏனெனில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கிராமப்புறங்களில் விளைவிக்கப்படுகின்ற உணவுப்பொருட்கள் காய்கறிகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நாம் அனைவரும் உயிரோட்டமுடன் வாழமுடிகின்றது.
தற்போது இந்தியாவின் மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் ஊரகங்களில் வாழ்ந்து வருவதால், ஊரக பொருளாதாரத்தின் ஆரோக்கியம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக வேளாண்மை அதன் முதுகெலும்பாக இருந்தபோதிலும், ஊரக பொருளாதாரமானது தொடர்ச்சியான பல்வேறு சவால்கள் வளர்ந்து வரும் வாய்ப்புகள் ஆகிய இரண்டாலும் இயக்கப்படுகின்ற ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
வேளாண்மையின் நீடித்த வலிமை

கிராமப்புற இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கான முதன்மை ஆதாரமாக வேளாண்மையே உள்ளது, இது 45% க்கும் அதிகமான தொழிலாளர்களைப் பயன்படுத்திகொள்கிறது. அதன் செயல்திறன் கிராமப்புற வருமானங்கள், நுகர்வு முறைகள் , கால்நடைகள், மீன்வளம், தோட்டக்கலை போன்ற தொடர்புடைய துறைகளில் வேலைவாய்ப்பை நேரடியாக பாதிக்கிறது. நேரடி வருமான ஆதரவை வழங்குகின்ற பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) போன்ற அரசாங்க முயற்சிகள் கிராமப்புற செலவு , நிலைத்தன்மை ஆகியவற்றினை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்துவருகின்றன.
இருப்பினும், பின்வருமாறான சவால்களை அதிகமாக எதிர்கொள்கிறது.
குறைந்த உற்பத்தித்திறன்: காலாவதியான வேளாண்மை நடைமுறைகள், துண்டு துண்டான சிறிய அளவிலான நில உடைமைகள், நவீன தொழில்நுட்பத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகலுக்கான உகந்த விளைச்சலைத் தடுக்கின்றன.
காலநிலை பாதிப்பு: ஒழுங்கற்ற மழைப்பொழிவு, வறட்சி, தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் ஆகியன வேளாண்மையின் வாழ்வாதாரங்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
சந்தை இணைப்புகள்: வேளாண்மை செய்பவர்கள் பெரும்பாலும் விளைபொருட்களுக்கு போதுமான விலை நிர்ணயம் , ஒழுங்கமைக்கப்பட்ட விநியோகச் சங்கிலிகள் ஆகியன சரியாக இல்லாததால் போராடுகிறார்கள்.
மேற்கூறியவாறான பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், கிராமப் புறங்களின் முன்னேற்றத்திற்கு தேவையான மகத்தான சாத்தியக்கூறுகளும் உள்ளன. செய்யறிவு(AI), பொருட்களுக்கான இணையம்(IoT) , இயந்திர மனிதனின்(Robotics) மூலம் பல்வேறு பணிகளை செயற்படுத்துதல் ஆகியவற்றினால் துல்லிய வேளாண்மையில் முன்னேற்றங்கள் மெதுவாக ஊடுருவி வருகின்றன. அதிகரித்த செயல்திறன் , நிலைத்தன்மைக்கான நம்பிக்கையை வழங்குகின்றன. நவீன நீர்ப்பாசன முறைகளில் முதலீடு செய்தல், பல்வேறு வகைகளிலான வேளாண் பயிர்களை விளைவித்தல் ஆகியவை எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானவைகளாகும்.
வேளாண்மை அல்லாத துறையின் எழுச்சி
கிராமப்புற இந்தியாவில் ஒரு முக்கிய போக்கு கிராமப்புறத்தில் வேளாண்மை அல்லாத துறையில் (RNFS) அதிகரித்து வருகின்ற முக்கியத்துவம் ஆகும். வேளாண் பொருட்களை நுகர்வோருக்கான பொருட்களாக உற்பத்திசெய்தலும் பதப்படுத்துதலும், கைவினைப் பொருட்கள், சேவைகள் (சுற்றுலா, சுகாதாரம், கல்வி போன்றவை), வர்த்தகம் உள்ளிட்ட பாரம்பரிய வேளாண்மைக்கு அப்பாற்பட்ட பரந்த அளவிலான பொருளாதார நடவடிக்கைகளை இது உள்ளடக்கியது.

கிராமப்புற வேளாண்மை அல்லாத துறையின் (RNFS)வளர்ச்சி பின்வருவனவற்றிற்காக இன்றியமையாததாகும்.
வருமானத்தை பல்வகைப்படுத்துதல்: கிராமப்புறங்கள் வேளாண்மையை மட்டுமே அதிகமாக நம்பியிருப்பதைக் குறைத்தல் வேளாண்மையில் உருவாகின்ற ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைத்தல்.
வேலைவாய்ப்பு உருவாக்கம்: ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்புகளை வழங்குதல், வேளாண்மையின் பருவகால வேலையின்மையை சரி செய்தல்.
வறுமையை குறைத்தல்: வேளாண்மக்களின் வருமானத்தை அதிகரித்தல், தொழில்முனைவோரை வளர்த்தல் ஆகியவற்றின் வாயிலாக வறுமையை குறைத்தல்
தற்போது, 50% க்கும் மேற்பட்ட கிராமப்புற தனிநபர்கள் RNFS இல் ஈடுபட்டுள்ளனர், இது அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. கல்வி, தொழில்நுட்ப திறன்கள் , எளிதானகடன் அணுகல் போன்ற காரணிகள் இந்தத் துறையில் பங்கேற்பை பெரிதும் பாதிக்கின்றன. சந்தை இணைப்புகளை வலுப்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் திறன் மேம்பாட்டை வழங்குதல் ஆகியவை அதன் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கு மிக முக்கியமானவைகளாகும்.
உள்கட்டமைப்பு, கல்வி, நிதி உள்ளடக்கம் ஆகிய சவால்களை எதிர்கொள்வது
பின்வருமாறான பல்வேறு வழிமுறைகளிலான சவால்கள் முழுமையான கிராமப்புற வளர்ச்சியைத் தொடர்ந்து தடுத்துவருகின்றன:
போதுமான உள்கட்டமைப்புஇல்லாதது: மோசமான சாலை இணைப்பு, போதுமான தொடர்ச்சியான மின்சாரம், சுத்தமான குடிநீர் , சுகாதாரத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகல் அதனோடு குறிப்பிடத்தக்க பொருளாதார செயல்பாட்டையும் வாழ்க்கைத் தரத்தையும் தடுக்கிறது.
தரமான கல்வி , சுகாதாரப் பராமரிப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகல்: இந்த குறைபாடுகள் மனித மூலதன மேம்பாட்டுடன் , கிராமப்புறங்களில் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கின்றன.
வறுமையும் வேலைவாய்ப்பின்மையும்: கிராமப்புற மக்களில் கணிசமான பகுதியினர் இன்னும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர். அதனோடு வரையறுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகள் இல்லாமலும் உள்ளன.
போதுமான நிதிபுழக்கம் இல்லாதது: பல கிராமப்புற சமூகங்கள் குறைந்த வட்டியில் கடன், நிதி ஆகிய சேவைகளுக்கான அணுகலைக் கொண்டிருக்கவில்லை, இதனால் சேமிக்க, முதலீடு செய்ய அல்லது முயற்சிகளுக்கு நிதிவசதியைப் பெறுவது மிகவும் கடினமாகின்றது.
அரசின் முயற்சிகள்: கிராமப்புற முன்னேற்றத்திற்கானவளர்ச்சிக்கு வழி வகுத்தல்

கிராமப்புற மக்களின் மேற்கூறிய பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவும், கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திடவும் இந்திய அரசு ஏராளமான செயல்திட்டங்களைத் தொடங்கியுள்ளது அவை:
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA): இது உத்தரவாதத்துடனான கூலிகிடைக்கின்றவாறான வேலை வாய்ப்பை வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்குகிறது, அரசானது இதன்வாயிலாக கிராமப்புறமக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்து முயற்சி செய்கிறது.
பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY): நெடுஞ்சாலை போக்குவரத்து வசதியுடன் இணைக்கப்படாத குடியிருப்புகளுக்கு அனைத்து வகையிலுமான சாலை இணைப்பை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது.
தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதார மிஷன் (DAY-NRLM): சுய உதவிக் குழுக்களாக (SHGs) ஒருங்கிணைத்து பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G): கிராமப்புற சமூகத்தின் ஏழ்மையான பிரிவுகளுக்கு வீட்டுவசதி வழங்குகிறது.
ஜல் ஜீவன் மிஷன்: தனிப்பட்ட ஒவ்வொரு குடியிருப்பிற்கும்/ வீட்டிற்கும் குழாய் வாயிலான இணைப்புகளின் மூலம் பாதுகாப்பான, போதுமான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனா (DDU-GKY): திறன் மேம்பாடு, கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.
குடிநீரின் பாதுகாப்பிற்கான மிஷன் அமிர்த சரோவர், சுகாதாரத்திற்கான ஸ்வச் பாரத் மிஷன் (கிராமின்) போன்ற செயல்திட்டங்களுடன் இந்த முயற்சிகள், மீள்தன்மை கொண்ட , வளமான கிராமப்புற சமூகங்களை உருவாக்குவதற்கு மிக முக்கியமானவைகளாகும்.
ஊக்கமளிக்கின்ற வெற்றிக் கதைகள்
கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்தினை தடுப்பதற்கு பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், கிராமப்புற தொழில் முனைவு , சமூக குழுவின் தலைமையிலான வளர்ச்சியின் திறனை ஏராளமான வெற்றிக் கதைகள் நிரூபிக்கின்றன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த “Mitticool” எனும் களிமண்ணாலேயே குளிர்சாதன பெட்டியை உருவாக்கிய மன்சுக்பாய் பிரஜாபதி போன்ற புதுமை விரும்பிகள் முதல் கூட்டு நடவடிக்கை , சந்தை இணைப்பு ஆகியவற்றின் மூலம் தங்களுடைய கிராமங்களை மாற்றி யமைக்கின்ற திறன்மிகு பெண்களின் சுய உதவிக்குழுக்கள் வரையிலான எடுத்துக்காட்டுகள் கிராமப்புற இந்தியாவின் புத்திசாலித்தனத்தையும் மீள்தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன.
எரிபொருட்களை திறனுடன் பயன்படுத்தி கொள்கின்ற திறன்மிகு இயந்திரங்களை உருவாக்குகின்ற தனிநபர்கள், நெசவு செயல்முறைகளை இயந்திர மயமாக்குதல், வேளான் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தல் ஆகியவை கிராமப்புறங்களில் செழித்து வளர்ந்து வளருகின்ற புதுமையின் உணர்விற்கு சான்றாகும்.
முடிவாக

இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. கிராமப்புற பொருளாதாரமானது வேளாண்மையில் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், அதன் எதிர்காலம் பன்முகப்படுத்தப்பட்ட , மீள்தன்மை கொண்ட பொருளாதார மாதிரியில் உள்ளது.
வலுவான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம், கல்வி , திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதன் மூலம், குறைந்த வட்டியில் நிதிவசதி எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், கிராமப்புறத்தில் வேளாண்மை அல்லாத பிற துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியா எனும் சக்கரத்தின் அதன் மையஅச்சுப்பகுதியாக விளங்குகின்ற கிராமப்புறத்தின் மகத்தான ஆற்றலை வெளிக்கொண்டுவர முடியும்.
அரசாங்கத்தின் செயல்திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல், உள்ளூர் தொழில்முனைவோரை உருவாக்குதல் ஆகியவற்றுடன் இணைந்த, இந்த முழுமையான அணுகுமுறை, இந்திய நாட்டினை முழுமையாக உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை அடைவதற்கு மிகவும்முக்கியமாகும்.