ஜனநாயகன் படத்தை தணிக்கை வாரிய குழு தலைவர் மறு ஆய்வு செய்வது அவசியம் என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் படம் வெளியாவதில் மேலும் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது கடைசித் திரைப்படமாக ‘ஜனநாயகன்’ என அறிவித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் படம் தற்போது வரை வெளியாகவில்லை.முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி, ‘ஜனநாயகன்’ படத்தில் சில மாற்றங்களுடன் யு/ஏ சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கைக் குழு பரிந்துரைத்தது.
அதன்படி, பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்து கடந்த மாதம் 24ஆம் தேதி படக்குழு மீண்டும் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து 29ஆம் தேதி யு/ஏ சான்றிதழ் வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள ராணுவம் தொடர்பான காட்சிகள் குறித்து புகார் வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு கடந்த 6ஆம் தேதி தணிக்கைக் குழு தலைவர் அனுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்புக் குழு நீதிமன்றத்திற்குச் சென்றது. இதனால், ஜனவரி 9ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி பி.டி. ஆஷா உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.ஆனால், தணிக்கைக் குழு அன்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரி தலைமை நீதிபதி அமர்வில் மனு தாக்கல் செய்தது.
இதனால், ‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகாதது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.இந்நிலையில், இன்று (ஜனவரி 27) சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் தணிக்கை வாரியத் தலைவர் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம். இரு தரப்பிற்கும் போதிய அவகாசம் அளிக்குமாறு கூறி மீண்டும் தனி நீதிபதி பி.டி ஆஷாவுக்கு வழக்கை மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஜனநாயகன் படம் வெளியாவதில் மேலும் கால தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
