தரைமட்ட கிணற்றில் விழுந்த யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ஆலந்துறை அடுத்த சாடி வயல் அருகே சோலை படுகை பகுதியில் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வந்த 3 யானைகள் உணவுக்காக விவசாய நிலப்பகுதிக்குள் நுழைந்தன.
இதுகுறித்து விவசாயிகள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விவசாய நிலத்திற்குள் புகுந்த 3 யானைகளில் இரண்டு யானைகள் வனத்திற்குள் திரும்பின.
இதில் 35 வயது மதிக்கத்தக்கக் காட்டு யானை ஒன்று வழி தெரியாமல் சோலைப்படுகை அருகே நிர்மலா என்பவருக்குச் சொந்தமாக தோட்டத்திலிருந்த தரைமட்ட கிணற்றுக்குள் விழுந்தது.
இதைத்தொடர்ந்து யானையை விரட்டும் பணியிலிருந்த வனத்துறையினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஜேசிபி உள்ளிட்ட கன ரக வாகனங்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த யானையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை குற்றாலம் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் காட்டுயானை முகாமிட்டு வந்த நிலையில் வனப்பகுதிக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.