செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டபோது கூட்டம் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் எங்கே நடந்த தவறு என கண்டுபிடிக்க, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து அதன் அதிகாரியாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை நியமித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அதன்படி சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே விஜய் பிரச்சாரத்தின் போது இந்த துயர சம்பவம் எப்படி நடந்தது என்று அறிய சம்பவ இடத்தில் தனது மனைவி, இரண்டு பெண் குழந்தைகளை பறிகொடுத்த ஆனந்த ஜோதி நமது மின்னம்பலம்.காம் -உடன் சோகத்துடன் பகிர்ந்துகொண்டார்.

மாலை 7 மணி கடந்தும் விஜய் அங்கு வரவில்லை!
செப்டம்பர் 27ஆம் தேதி புரட்டாசி சனி என்பதால் காலை 11.30 மணிக்கு சாமிக்கு எல்லாம் படைத்துவிட்டு எனது தாயார், எனது தம்பி, மனைவி, இரண்டு பிள்ளைகள் என குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம்.
அப்போது எனது பிள்ளைகள் ’விஜய் மாமாவை பார்க்க வேண்டும், விஜய் மாமாவை பார்க்க வேண்டும்’ என அடம்பிடித்தனர்.
அதனால் நான் எனது மனைவி ஹேமலதா, மகள் சாய் லெட்சனா, சாய் ஜீவா ஆகிய நான்கு பேரும் பைக்கில் சிவ சக்தி நகரில் இருந்து வேலுசாமிபுரத்தை மதியம் 12 மணிக்கு சென்றடைந்தோம்.
விஜய் பேசக்கூடிய இடத்தை அறிந்து அதன் அருகில் மனைவி, பிள்ளைகளை உட்கார வைத்து விட்டு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்தேன். மதியம் 2 மணிக்கு வருவார் என்றார்கள். ஆனால் மாலை 7 மணி கடந்தும் விஜய் அங்கு வரவில்லை.

சுமார் 7.15 மணியளவில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன், ’அண்ணன் வருகிறார் அண்ணன் வருகிறார்’ எனக் காரில் முழக்கமிட்டுக்கொண்டே சென்றார். அந்த நேரத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் திடீரென வந்ததால் ’வழி விடுங்கள் வழி விடுங்கள்’ என சாலையில் இருந்தவர்கள் இரண்டு பக்கமும் தள்ளினார்கள். அப்போது மக்கள் கூட்டம் கடல் அலைகள் போல சுழன்று அடித்தது. அப்போதுதான் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் கூட்டத்தில் சிக்கினார்கள், அந்த நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அப்போதுதான் அந்த இடத்திற்கு விஜய் வருகை தந்தார். அந்த இடத்தில் அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதுதான் அப்போது நடந்த சம்பவம்” என அங்கு நடந்ததை அப்படியே விவரித்தார் ஆனந்த ஜோதி.

காவல்துறை என்ன சொல்கிறது?
இதுதொடர்பாக காவல்துறையிடமும் நாம் விசாரித்தோம். அவர்கள் கூறுகையில், ”விஜய் பிரச்சாரத்திற்கு எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ் ஐ மற்றும் போலீஸ் உட்பட 518 பேர் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தோம். கூட்டம் அதிகரித்ததால் கூடுதலாக 100 போலீஸ் வரவழைத்து மொத்தம் சுமார் 620 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம்.
விஜய் பயணத்திட்டம் டிசம்பர் 13ஆம் தேதி தான் நேரம் கேட்டனர். ஆனால் திடீரென தேதியை மாத்தி செப்டம்பர் 27ஆம் தேதி கேட்டார். அப்போது ’விஜய் பேசும் நேரத்தில் மின் இணைப்பை துண்டித்து விடுங்கள்’ என எழுத்து மூலமாக கொடுத்தனர். அதற்கு காரணமாக ’தொண்டர்கள் ஆர்வத்தில் மின் கம்பம், மின் இணைப்பு செல்லும் பகுதியில் ஏறி விடுகிறார்கள். அதனால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மின் மின்சாரத்தை தடை செய்யுங்கள்” என்று கூறியிருந்தனர்.
மதியம் 12 மணி முதல் 5 மணி வரை விஜய் பிரச்சாரம் செய்யும் சாலையில் சுமார் 4000 மொத்தம் மட்டுமே இருந்தனர். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் அங்கிருந்த மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட் கொடுத்திருந்தல் ஓரளவுக்கு பாதிப்பை தடுத்திருக்கலாம். மேலும் வந்த கூட்டத்தினர் கரூரில் இருந்து மட்டுமல்ல திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், ராம்நாடு, தஞ்சாவூர், விருதுநகர் பகுதியில் இருந்தும் கலந்து கொண்டனர்.
இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 பேர், திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று, ஈரோடு மாவட்டத்தில் மூன்று, திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு மற்றும் சேலம் மாவட்டத்தில் இரண்டு பேர் என மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.
நெரிசலில் பாதிக்கப்பட்டு ராம்நாடு, விருதுநகர், தஞ்சாவூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 146 பேர் சிகிச்சை பெற்றனர். அதில் 142 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். மீதி 4 பேர் திருச்சி மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஜய் வேலுசாமிபுரத்தில் அனுமதிக்கப்பட்ட பாயிண்டிற்கு வருவதற்கு முன்னதாக, கட்டுங்கடங்காத கூட்டத்தைப் பார்த்த ஐஜி ஜோஷி நிர்மல் குமார், ”விஜய்யை பாயிண்ட்டுக்கு அனுப்ப வேண்டாம். அதற்கு முன்பாக நிறுத்தி பேச சொல்லுங்கள். அந்த பாயிண்டில் கூட்டம் அதிகமாக இருக்கிறது” என மூன்று முறை மைக்கில் எச்சரித்தார். அதன்படி எஸ்பி ஜோஸ் தங்கய்யா, டிஎஸ்பி செல்வராஜ் மூலமாக விஜய்க்கு தகவல் சொல்ல சொன்னார். அவர் விஜய் வாகனத்தை மறித்து, ‘அங்கே செல்ல வேண்டாம். கூட்டம் அதிகமாக இருக்கிறது. இப்படியே பேசிவிட்டு முடித்துக் கொள்ளுங்கள்’ என்றனர். ஆனால் அதைக் கேட்காமல் பிரச்சார வாகனத்தை நகர்த்தினார்கள். அப்போது உதவி ஆய்வாளர் ரமேஷ் பேருந்தை தட்டி நிறுத்தி உள்ளனர். ஆனால் அதையும் மீறி பேருந்தை நகர்த்தி சென்றனர். இதுவும் கூட்ட நெரிசலில் பலியானதற்கு ஒரு காரணம் பார்க்கப்படுகிறது.
நேரம் குறித்து கொடுத்த ஆர். சந்திரசேகர்
”செப்டம்பர் 27ஆம் தேதி காலை 8.00 மணிக்குள் வீட்டிலிருந்து புறப்பட்டு விட வேண்டும். மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை நல்ல நேரம். அப்போது பிரச்சாரத்தை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்’ என நேரத்தை குறித்து கொடுத்துள்ளார் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான கடலூர் ஆர். சந்திரசேகர். அதனாலயே அந்த நேரத்திற்கு பிரச்சார பயணத்தை திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.

அச்சத்தில் தவெக நிர்வாகிகள் மற்றும் போலீசார்!
சிறப்பு புலனாய்வு விசாரணை அதிகாரி ஐஜி அஸ்ரா கார்க், ”விசாரணை நடைபெறும் இடத்தில் காவல்துறையினர் யாரும் வரக்கூடாது. தான் அழைப்பவர்கள் மட்டுமே வர வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா, காவல்துறையினர் எடுக்கப்பட்ட வீடியோ புகைப்படங்கள், அதில் உள்ள நபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர், விஜய் உதவியாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் மதியழகன், பிரச்சார வாகனத்தில் பயணித்த ஆதவ அர்ஜுனா, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள், போலீசார், மருத்துவர்கள் 108க்கு முதல் அழைப்பு கொடுத்தவர் அடுத்தடுத்து அழைப்பு கொடுத்தவர்கள் என ஒரு நீண்ட பட்டியலை தயார் செய்துள்ளது சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு.
மேலும் பிரச்சார வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கேட்க மெமோ அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். இதனால் தமிழக வெற்றி கழகத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் தற்போது பயத்தில் இருப்பதாக சொல்கிறார்கள் கரூர் மாவட்ட போலீசார்.