ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாயின் தாயார் பங்கேற்றது எப்படி?

Published On:

| By Mathi

Amstrong Statue

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் இன்று ஜூலை 5-ந் தேதி அவரது முழு உருவச் சிலையை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாயின் தாயார் கமல்தாய் பாய் திறந்து வைத்தது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. Amstrong Statue CJI B.R. Gavai

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட முதலாமாண்டு நினைவுநாள் ஜூலை 5-ந் தேதி இன்று கடைபிடிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவச் சிலையும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாயின் தாயார் கமல்தாய் பாய் திறந்து வைத்தார்.

ஆம்ஸ்ட்ராங், தலித்தாக இருந்தாலும் அம்பேத்கரைப் பின்பற்றி பவுத்த மதத்தைத் தழுவியவர். அம்பேத்கர் பவுத்த மதத்துக்கு மாறி தீட்சை பெற்ற இடம் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில்தான். ஒவ்வொரு ஆண்டும் இங்கு அம்பேத்கரிஸ்டுகள் பெரும் எண்ணிக்கையில் கூடுவர். இந்த நிகழ்வுகளுக்காக நாக்பூருக்கு ஆம்ஸ்ட்ராங்கும் குடும்பத்தினருடன் சென்று வந்தாராம்.

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய், மகாராஷ்டிரா மாநிலம் அதே நாக்பூரைச் சேர்ந்தவர்தான். பிஆர் கவாய் குடும்பமும் தலித்.. ஆனால் அம்பேத்கரைப் பின்பற்றி பவுத்த மதத்தைத் தழுவியவர்கள்.

ஆம்ஸ்ட்ராங்குக்கு நாக்பூர் பவுத்த பிக்குகள் உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இந்த தொடர்புகளை வைத்துதான் பிஆர் கவாயின் தாயாரை அழைத்து வந்ததாம் ஆம்ஸ்ட்ராங் குடும்பம்.

அதே நேரத்தில் இந்த தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம். ஏனெனில் பிஆர் கவாய் தாயார் வருகிற செய்தி ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டால் அவரது வருகையை தடுத்துவிடுவார்களோ என்பதால்தான் கடைசிவரை யாருக்கும் சொல்லாமல் இருந்ததாம் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share