துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது. செந்தமிழ்நாட்டிற்கு விருந்தினராக கொங்கு நாட்டிலிருந்து கழக மூத்த முன்னோடி செங்கோட்டையன் வந்திருக்கிறார் என பசும்பொன்னில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில் இந்த ஆண்டு தேவர் குரு பூஜை விழா தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயாலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமை மீதான அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் மூவரும் இணைந்து பசும்பொன் முத்துராம லிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம்,” அஇஅதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் விதமாக நாங்கள் பிரிந்திருக்கிற சக்திகள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு நம்பிக்கையோடு கூடி ஐயாவின் சன்னதியில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் நிறுவிட வேண்டும் என்று சபதத்தை மேற்கொண்டிருக்கிறோம். தற்போது நடைபெறும் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வகையில் எங்கள் ஒருங்கிணைப்பு இருக்கும்” என்றார்.
பின்னர் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் கூட்டணி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அம்மாவின் தீவிர தொண்டரும், புரட்சி தலைவரின் காலத்தில் இருந்து இயக்கத்தில் தொடர்ந்து வரும் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் இன்று நமது பசும்பொன் தேவர் ஐயாவிற்கு வீர அஞ்சலி செலுத்தற்காக நம்மோடு கலந்து கொண்டிருக்கிறார். அம்மா தொடர்ந்து இங்கே வரும் போது, அம்மாவிற்கு முன்பே ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் இங்கு வந்து முகாமிட்டு அம்மாவிற்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தவர்கள். இன்றைக்கு அம்மாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செங்கோட்டையன் கொங்குநாட்டில் இருந்து இங்கு வந்துள்ளார்.
துரோகத்தை வீழ்த்த, மீண்டும் தமிழகத்தில் புரட்சித்தலைவர், புரட்சிதலைவி அம்மாவின் சிறப்பான ஆட்சியை கொண்டு வர கரம் கோர்த்து தேர்தல் பணியாற்ற உள்ளோம்.
துரோகத்தை வீழ்த்துவதற்கு தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது.
அம்மாவின் கட்சியான அதிமுக எங்களுக்கு எதிரி கிடையாது. எடப்பாடி அதிமுகதான் எங்களுக்கு எதிரி. எடப்பாடி என்ற துரோக மனிதர்தான் அமமுகவிற்கு எதிரி” என்றார்.
