என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்துள்ளார்.
ஆனால் இந்த நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள வில்லை. எனினும் டிடிவி தினகரனை மனமார வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதேசமயம் டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்ப்போம்”
டிடிவி தினகரனின் பதில்
“மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதாவின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்”
அண்ணாமலை வரவேற்பு
இந்தசூழலில் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை தனது எகஸ் பக்கத்தில், “வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிடிவி தினகரனின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்” என்று அமமுகவை வரவேற்று பதிவிட்டுள்ளார்.
