2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு நெல்லை தச்சநல்லூரில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 5 மக்களவைத் தொகுதிகளைச் சார்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்ற தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டிற்கு மொத்தம் 22 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக 20 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் 6500 பெண்கள் உட்பட மொத்தம் 17 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். அதிலும் குறிப்பாக பூத் முகவர்கள் மாநாட்டில் 60 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் புறப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை தமிழக பாஜக முன்னாள் தலைவர்களான தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
வந்திறங்கிய சில நிமிடங்களில் தூத்துக்குடியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்கினார். அங்கு அமித் ஷாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழக பாஜக மாநிலத் தலைவரான நயினார்.
அதன்பின்னர் கார் மூலம் தச்சநல்லூரில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டுக்கு சென்றார் அமித் ஷா. ஆனால் அப்போதும் மாநாட்டு இருக்கைகள் முழுவதுமாக நிரம்பவில்லை.
மாநாட்டில் முதல் நிகழ்வாக மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல கணேசனுக்கு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமித் ஷா.
அதன் பின்னர் அவர் முன்னிலையில் திமுகவின் முக்கிய பிரமுகராக அறியப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்.

மாநாட்டில் அண்ணாமலை பேசுகையில், “2026 சட்டமன்ற தேர்தலில் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நம் ஒவ்வொருவரின் கடமை” என பேசினார்.
கடந்த சில மாதங்களாக. ’2026ல் கூட்டணி ஆட்சி தான்’, ’ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என பேசி அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார் அண்ணாமலை. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவர் வாயாலேயே ’எடப்பாடியை முதல்வராக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை’ என இன்று பேச வைத்தது பாஜக தலைமை.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், ”ஏழு பூத் கமிட்டி மாநாடு நடத்திவிட்டு, சென்னையில் நடக்கும் கடைசி மாநாட்டை பிரம்மாண்டமாக 8 லட்சம் பேர் கூடும் அளவிற்கு நடத்த வேண்டும். அதில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி கலந்துகொள்ள வேண்டும்” என மேடையிலேயே கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேச வந்த அமித் ஷா முதலில், தன்னால் தமிழில் பேச முடியாததற்கு மாநாட்டில் பங்கேற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். மேடையில் இருந்து ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லும்போது கூட்டத்தில் கைத்தட்டல் பறந்தது. ஆனால் தற்போதைய பாஜக தலைவரான நயினார் நாகேந்திரனை விடவும், அண்ணாமலை பெயரை உச்சரித்தபோது அதிகமான வரவேற்பும், கைத்தட்டலும் இருந்ததை உன்னிப்பாக கவனித்தார் அமித் ஷா. அதேநேரத்தில் கொஞ்சம் டென்சனாக காணப்பட்டார் நயினார்.
மேடையில் இருந்த அனைவரின் பெயரையும் சொன்னவர், காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய விளவங்கோடு முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். அதனை அங்கிருந்த யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால் மேடையில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் விஜயதாரணி.

தொடர்ந்து பேசிய அமித் ஷா கூட்டணி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் பெயரை ஒருமுறைக் கூட உச்சரிக்கவில்லை. மேலும் முதல்வர் ஸ்டாலினை பற்றி பேசுகையில், “நேற்று நான் நாடாளுமன்றத்தில் அறிமுகபடுத்திய 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். இது கருப்பு சட்டம் என சொல்கிறார். இதனை சொல்வதற்கு அவருக்கு அதிகாரமில்லை, உரிமையில்லை. அமலாக்கத் துறை வழக்குகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சிறையில் இருந்துள்ளனர். சிறையிலிருந்து ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா? ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்த முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் ”சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று நினைக்கிறார். அதுபோன்று தமிழகத்தில் ஸ்டாலின் தனது மகன் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். இவர்கள் இருவருக்கும் இது ஒன்றுதான் அஜெண்டா. ஆனால் இது நடக்காது” எனத் தெரிவித்தார்.

இப்படி அமித் ஷா பேசிக் கொண்டிருக்கும்போதே, கூட்டம் மெதுவாக கலையத் தொடங்கியது. அப்போது மேடையில் இருந்த தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அருகில் இருந்த நயினார் நாகேந்திரனை சீண்டி, ’அதோ பார் கூட்டம் கலைந்து போகிறது’ என கைகாட்டி சொல்ல, சுற்றுமுற்றும் பார்த்த நயினார் அதற்கு மேல் எந்த ரியாக்சனும் கொடுக்காமல் அமைதியாகிவிட்டார்.
மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து சுமார் ஒன்னேகால் லட்சம் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் மாநாட்டில் 20 ஆயிரம் பேர் கூட இல்லையென்றும், வந்தவர்களில் பலர் அதிக வயதானவர்கள், அவர்களும் பேசி கொண்டிருக்கும்போதே கலைந்ததையும் கவனித்த அமித் ஷா அப்செட் ஆகிவிட்டார் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.

மாநாடு முடிந்து பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலணியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அமித் ஷாவிற்கு பற்பல பலகாரங்களுடன் தேநீர் விருந்து வைத்து அசத்தினார் நயினார் நாகேந்திரன். அப்போது அங்கிருந்த மாநில நிர்வாகிகளிடம், ’ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள். அதுதான் தேர்தலுக்கு நல்லது’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஏனென்றால் தூத்துக்குடிக்கு வந்தது முதல் மாநாடு முடியும் வரை நயினார், அண்ணாமலை, தமிழிசை, வானதி சீனிவாசன் ஆகியோரிடம் சற்று இடைவெளி காணப்பட்டதை கண்டறிந்த பின்பே இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளாராம் அமித் ஷா.
மாநாடு மேடையிலேயும், தூத்துக்குடி வரவேற்பு நிகழ்ச்சியிலேயும், அண்ணாமலை – நயினார் இடையே உள்ள இடைவெளியை வெளிப்படுத்தி காட்டியது.
மாநாடு முடிந்து நயினார் வீட்டிற்கு சென்று தேநீர் விருந்தில் கலந்துகொண்ட அமித் ஷா, மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.