2026 தமிழக சட்டமன்ற நெருங்கி வர வர அரசியல் களம் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இயங்கி வருகிறது.
அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவும் இந்த தேர்தலில் தாமரையை தமிழகத்தில் மலர வைக்க அடுத்தடுத்து முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் தமிழக பாஜக தலைவர்களுடன் இன்று (செப்டம்பர் 3) முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.
கூட்டத்தில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து முதலில் கேட்டறிந்த அமித் ஷா, தேர்தலையொட்டி அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பேசினார்.
அவர், “உங்களுடைய மாநிலத்தில் இருக்கும் கோஷ்டி மோதலை நிறுத்த வேண்டும். உங்களுக்குள் இருக்கும் புகார் குறைகள் எல்லவற்றையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இங்குள்ள தலைவர்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நன்றாக தெரியும். மேலும் கூட்டணியில் தேவையில்லாமல் சலசலப்பு வேண்டாம். நமக்கு சாதகமான சின்ன சின்ன கட்சிகளை கண்டறிந்து கூட்டணியை வலுப்படுத்துங்கள். அதை சேர்ப்பதற்கு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.” என ஆரம்பிக்கும்போதே நிலவிவரும் உட்கட்சி பூசலுக்கு முடிவுகட்டி கூட்டணியை வலுபடுத்தி அறிவுறுத்தினார்.
அதன்பின்னர், “இப்போது நான் உங்களை எதற்காக கூப்பிட்டிருக்கிறேன் என்றால், தற்போது அரசியல் சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சீட் வெல்ல வேண்டும் என நாம் ஒரு இலக்கு வைத்துள்ளோம். அதற்கு கட்சியை பலப்படுத்த வேண்டும்.
அதற்கு நான் சொல்வது, தமிழ்நாட்டில் நமக்கு வாய்ப்புள்ள தொகுதிகள், கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எங்கெங்கு எவ்வளவு ஓட்டு வாங்கியுள்ளோம்? தனித்து நிற்கும்போது எங்கெங்கு எவ்வளவு ஓட்டு வாங்கியுள்ளோம்? வரும் தேர்தலில் நமக்கு எங்கெங்கு வெல்ல வாய்ப்புள்ளது? அதற்கான சாதக காரணங்கள் என்ன? என மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 60 தொகுதிகளை அடையாளம் கண்டு நீங்கள் எனக்கு பட்டியல் தர வேண்டும்.
வரும் அக்டோபரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாமரை எழுச்சி யாத்திரை நடத்த வேண்டும். அது 2026 தேர்தலுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். இந்த யாத்திரை எல்லா தொகுதிகளுக்கும் சென்றிருக்க வேண்டும்” என ஐடியாக்களை அடுக்கியுள்ளார்.
சமீபத்தில் நெல்லை பூத் கமிட்டி மாநாட்டிற்கு வந்திருந்த அமித் ஷா, அந்த வந்திருந்த கூட்டத்தையும், பெருமளவில் நிரம்பியிருந்த 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கண்டு அதிருப்தியடைந்தார். இதுதொடர்பாக நமது மின்னம்பலம்.காம் தளத்தில், “பாஜகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு… அமித் ஷா அப்செட்?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதனை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசிய அமித் ஷா, “தமிழ்நாட்டில் நான் பார்த்த அளவிற்கு பூத் கமிட்டி மிக பலவீனமாக இருக்கிறது. எனவே அதில் கவனம் செலுத்துங்கள். தகுதி வாய்ந்த நபர்களை பொறுப்பாளர்களாக நியமியுங்கள். அதன்பிறகு மண்டல அளவிலான பூத் கமிட்டி நடத்துங்கள். அப்போது மாநாட்டிற்கு நாங்கள் யார் வருகிறோம் என்று முடிவு செய்து சொல்கிறோம்” என்றார்.
தொடர்ந்து அவர், ”உங்களுக்குள் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது. அதைப்பற்றி வெளியே சொல்லாதீங்க. எதுவாக இருந்தாலும் தலைமைக்கு தெரியப்படுத்துங்கள்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட வானதி சீனிவாசன் உள்ளிட்ட சிலர், கூட்டணி நன்றாக இருக்கும்போது அதில் சலசலப்பை ஏற்படுத்துகிறார், கட்சியில் தனிநபர் ஆதிக்கம் செலுத்துகிறார் என அண்ணாமலை பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அமித் ஷா, “அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இனி அப்படி நடக்காது. கூட்டணியில் சின்ன விரிசல் என்றாலும் தலைமைக்கு உடனே தெரியப்படுத்துங்கள். முடிந்தளவு கூட்டணியை வலுப்படுத்த பாருங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை மீது ஏற்கெனவே டெல்லிக்கு ஏகப்பட்ட புகார்கள் சென்ற நிலையில், அது இந்த கூட்டத்தில் வெடித்து விடக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலையை இன்று டெல்லிக்கு தலைமை அழைக்கவில்லையாம்.
எனினும் அடுத்த ஓரிரு நாளில் அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து தனியாக அழைப்பு விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.