நாட்டின் பிரதமர், மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ‘கடுமையான குற்றச்சாட்டுகளின்’ கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்க வகை செய்யும் சட்ட மசோதாவை மக்களவையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைய உள்ள நிலையில் பல முக்கியமான மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்றுதான் பிரதமர்- முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட மசோதா.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்யும் இந்த மசோதாவானது, பிரதமர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவர்கள் பதவியை இழக்க அல்லது பதவியைப் பறிக்க வகை செய்யும்.
பிரதமர் 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் 31-வது நாள் அவரது பதவி பறிபோய்விடும் அல்லது அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வார்; முதல்வர் மற்றும் மாநில அமைச்சர் ஒருவர் 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31-வது நாள் அவர்களது பதவி பறிபோகும் அல்லது அவர்களை ஆளுநர்கள் பதவி நீக்கம் செய்வர்.
இந்த மசோதாவானது, அரசியல் சாசனத்தின் 75, 164, 239AA ஆகிய பிரிவுகளில் திருத்தங்களை கொண்டு வருகிறது என்கின்றன தகவல்கள்.
இதுபற்றி இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கூறுகையில், இது ஜனநாயகத்துக்கு பேராபத்தானது. மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை கேலிக்கூத்தாக்கக் கூடியது. மத்திய அரசின் கீழ் உள்ள விசாரணை அமைப்புகள் முற்று முழுதாக எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் அமைப்புகளாக உருமாற்றப்பட்டுவிட்டன. மாநிலங்களின் ஆளுநர்களும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். அப்படியான சூழ்நிலையில் இத்தகைய மசோதாக்கள் மோசமான விளைவுகளையும் கடுமையான அரசியல் குழப்பங்களையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.
மேலும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது இந்தியா கூட்டணி மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் என்கின்றனர் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்.
