அ. குமரேசன்
“ஒரு அமைச்சரோ, முதலமைச்சரோ, பிரதமரோ சிறைக்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை நடத்துவது முறைதானா என்று மக்கள் முடிவு செய்வார்கள்.” புதனன்று (ஆக.20) நாடாளுமன்றத்தில் 130ஆவது சட்டத்திருத்த முன்வரைவையும், ஒன்றியப் பகுதிகளுக்கும் ஜம்மு–காஷ்மீருக்குமான முன்வரைவுகளையும் முன்மொழிந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இவ்வாறு கூறினார்.
இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்குள் எழுந்த கேள்வி “இதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அந்த அதிகாரத்தை மக்களிடம் விடுவது சரியானதுதான், பிறகு ஏன் இதற்கொரு சட்டம் கொண்டுவர முயல்கிறீர்கள்?”
நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிசீலனைக்கு இந்த முன்வரைவுகள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களும் அங்கீகரித்தால், குடியரசுத் தலைவர் கையெழுத்திட சட்டங்களாக மாறும். அந்தச் சட்டங்களின்படி, மாநிலங்களின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், ஒன்றியப் பகுதிகளின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பிரதமர் ஆகியோர், 5 ஆண்டுகளும் அதற்கு மேலும் சிறைத் தண்டனை அளிக்கத்தக்க ஒரு குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, 30 நாட்கள் தொடர்ச்சியாகக் காவலில் வைக்கப்படுவார்களானால், 31ஆவது நாளில் அவர்கள் தாமாகவே பதவி இழப்பார்கள்.
சட்ட உரை 75க்கான திருத்த முன்வரைவின்படி பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக் காவலில் இருந்திருப்பார்களானால் தாங்களாகப் பதவி இழப்பார்கள். 164ஆவது சட்ட உரைக்கான திருத்தம் மாநிலங்களின் முதலமைச்சர்களும் அவர்களது அமைச்சர்களும் அந்த 31ஆம் நாள் அவர்களாகவே பதவியில் இல்லை என்றாக்குகிறது. 239 ஏஏ சட்ட உரைத் திருத்தம் தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியின் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் பதவியிழக்க வழி செய்கிறது. இவையன்றி, ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகிய யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத் திருத்த முன்வரைவு –2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த முன்வரைவு –2025 ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்படுகிற ஒருவர் மறுபடியும் நியமிக்கப்படலாம், ஆனால் அவர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது குற்றமற்றவர் என நிறுவப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், குற்றவாளி என நிறுவப்படுகிற ஒருவர், ஏற்கெனவே இருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
அரசமைப்பின் அறநெறி

இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் தரப்பில் கூறப்படும் முக்கியமான நோக்கம் அரசமைப்புப் பதவிப் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறநெறியைப் பாதுகாப்பதுவாம். அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் ஆகிய முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகச் சிறையில் இருந்தால், அவர்களது அறநெறி மீது கேள்வி எழுகிறது. அவர்கள் அந்தப் பதவிகளில் தொடர்ந்து செயல்படுவது நாட்டின் அறநெறியையும் பொது நம்பிக்கையையும் குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்று அரசு வாதிடுகிறது.
மறுபக்கத்தைப் பார்க்காமல் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்தால் இப்படிப்பட்ட சட்டத் திருத்தம் ஏற்கத் தக்கதுதானே என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படும். மறுபக்கத்தில் முதலில் கண்ணில் படுவது, இந்தச் சட்ட முன்வரைவு மசோதா, ஒருவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, சிறைக் காவலில் இருக்கும் நாட்களின் அடிப்படையிலேயே பதவி இழப்புக்கு வழிவகுக்கிறது.

உலக அளவில் குற்றவியல் சட்டங்களுக்கான அறநெறி ஒன்று இருக்கிறது. அதாவது, குற்றச்சாட்டு நிறுவப்படும் வரையில் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும். புல்லரிக்க வைக்கிற வகையில் அரசமைப்பு சாசன அறநெறியைப் பாதுகாப்பது பற்றிப் பேசுகிறவர்கள், இந்த அடிப்படை அறநெறியைக் கழற்றிவிடுவதை வெறும் வேடிக்கை முரணாகப் பார்க்க முடியுமா? அதன் அரசியல் உள்நோக்கத்தை விசாரணைக் கூண்டில் நிறுத்தாமல் இருக்கலாமா?
தள்ள முடியாத விமர்சனங்கள்
இது சட்டமாகிறபோது, தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கூறுவதைத் தள்ளிவிட இயலாது. குறிப்பாக, ஒன்றிய ஆளுங்கட்சியுடன் உடன்படாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையைப் புறக்கணிப்பதற்கில்லை.
இதில் பிரதமரையும் ஒன்றிய அமைச்சர்களையும் உட்படுத்தியிருக்கிறோமே என்று பாஜக தரப்பில் கேட்கிறார்கள். ஆனால், ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் மீது எந்த அளவுக்கு நடவடிக்கைகள் பாயும்? பிரதமரையும் அல்லது அமைச்சர்கரையும் கைது செய்து சிறைக் காவலில் வைத்துவிடுவார்களா? அதுவும் அத்தனை நாட்கள் காவலில் வைத்துவிடுவார்களா? சட்ட வார்த்தைகளாக மட்டும் பார்க்கிறபோது நியாயமானதாக, கவர்ச்சிகரமாக இருக்கிறது. நடைமுறை அனுபவம் என ஒன்று இருக்கிறதே? நடப்பு உண்மை அரசியல் என ஒன்று இருக்கிறதே? அது அந்தக் கவர்ச்சியைத் துடைத்தெறிகிறது.
மாநில அரசாங்கங்களில் அத்துமீறித் தலையிடுவதை எளிதாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கான ஒரு திரையாகவே இப்படி பிரதமரையும் ஒன்றிய அமைச்சர்களையும் சேர்க்கிற தந்திரம் கையாளப்பட்டிருக்கிறது என்று வலைத்தளக் குடிமக்கள் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.
356ன் முன்னுதாரணம்

முன்பு ஒன்றிய ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தன்னுடன் இசைந்து வராத மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கு, அரசமைப்பு சாசனத்தின் 356ஆவது சட்டப் பிரிவைத் தாறுமாறாகப் பயன்படுத்திய வரலாறு உண்டு. 1959இல் முதல் முறையாக இந்தச் சட்டத்தை வீசி, கேரளத்தில் இ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசை அன்றைய நேரு அரசு கலைத்தது. தமிழ்நாட்டில் கருணாநிதி அரசு இந்திரா காந்தியாலும், சந்திரசேகராலும் இரண்டு முறை கலைக்கப்பட்டது. இப்படி நாடு முழுக்க 90க்கு மேற்பட்ட முறைகள் கலைக்கப்பட்ட வரலாறு அது.
1989இல் கர்நாடக மாநிலத்தின் எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான ஜனதா தளம் கட்சி அரசை, பிரதமர் ராஜீவ் காந்தி கலைத்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், 1994இல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு 356ஆவது சட்ட உரையைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாற்றில் இடம் பிடித்தது.
அதன் பிறகு இன்று வரையில், 356இன் பக்கம் ஒன்றிய ஆட்சியாளர்கள் போகவில்லை. அதற்கான மாற்றுப் பாதையாக இந்த 130ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
சட்டத் திருட்டு
”அந்தச் சட்டத்தை விட இது எளிதானது. மாநில அரசின் செயல்பாடு குறித்து ஆளுநரின் அறிக்கையோ ஆதாரமோ தேவையில்லை. சும்மா ஒரு வழக்கைப் பதிவு செய்து, 30 நாட்கள் காவலில் வைத்திருந்தால் போதும், மாநில அரசு பலியாகிவிடும்,” என்கிறார் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. பிரேம்சந்திரன். “அரசமைப்பு சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை முற்றிலும் தகர்ப்பதாக இந்தச் சட்ட முன்வரைவுகள் இருக்கின்றன,” என்கிறார் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மணிஷ் திவாரி. “முறையான சட்ட வழிகளை அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள். புலனாய்வு அதிகாரியை பிரதமருக்கே எஜமானராக மாற்றுகிறார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் ராகுல் காந்தி, “ஒரு அரசன் தனக்கு யாருடைய முகமும் பிடிக்காமல் போனால் அவரை ஒழித்துக்கட்டிய மத்திய காலக்கட்டத்திற்கு இந்தச் சட்ட முன்வரைவு நாட்டை இட்டுச் செல்கிறது,” என்று கூறியிருக்கிறார். வாக்குத் திருட்டுக்குப் பிறகு இது சட்டத் திருட்டு என்று வேறு பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கூறி வருகிறார்கள்.
நாஜி ஜெர்மனியின் காவல்படையான ‘ஜெஸ்டபோ’ போல இருக்கிறது என்று அனைத்திந்திய மஜ்லிஸ்–இ–இத்திஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் அஸாதுதீன் ஒவாஸி. அற்பமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செயலாக்க அமைப்புகளே நீதிபதிகளாகவும் நடுவர்களாகவும் தண்டனையை நிறைவேற்றுகிறவர்களாகவும் செயல்பட வழி செய்யப்படுகிறது என்று அவர் சாடியிருக்கிறார்.
ஏனிந்த வேகம்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் சு.வெங்கடேசன் இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் கொடூரமான தாக்குதல் என்று விமர்சித்திருக்கிறார். அத்துடன், ஆகஸ்ட் 19 மாலையில் உள்துறை அமைச்சகத்தால் மக்களவைச் செயலாளருக்குக் கடிதம் எழுதப்பட்டு, மறுநாளே மக்களவையில் தாக்கம் செய்யப்படடிருக்கிற” படுவேக நடவடிக்கையையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“தற்போதைய ஆட்சியின் நவீன பாசிசப் போக்குகளைக் கருத்தில் கொண்டால், இந்த சட்டமுன்வடிவுகள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறிவைப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகும். அருவருப்பான இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்குத் தேவையான கட்டுப்பாடுகளையும் சமநிலைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மோடி அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்களை மறைப்பதற்காகவே இந்த சட்ட முன்வரைவுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன,” என்று சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவிநீக்கம் செய்யலாம். பாஜக வைத்ததுதான் சட்டம்,” என்று தமிழ்நாட்டு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். “வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு – எல்லாக் கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும். பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது,” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“வாக்குத் திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, தற்போதைய பாஜக அரசு சட்டப்பூர்வமானதா என்பதே ஐயமாக உள்ளது. தில்லுமுல்லுகளின் மூலம் மக்களின் தீர்ப்பைக் களவாடியுள்ள பாஜக, அதிலிருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்ப முயற்சி செய்கிறது. அதற்காகத்தான், இந்த சட்டமுன்வரைவைக் கொண்டுவந்துள்ளது,” என்றும் அவர் அதன் நோக்கத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தீர்ப்பு மீறல்
பல்வேறு பத்திரிகைகளும் தங்களுடைய தலையங்கங்களில் திடீர்த் திருத்த முன்வரைவை விமர்சித்திருக்கின்றன. கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறவர்கள் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், ஏதோவொரு குற்றச்சாட்டின் பேரில் விசாரணையே இல்லாமல், நீதிமன்றத் தீர்ப்பே இல்லாமல் ஒரு மாதம் காவலில் வைக்கப்பட்டுவிட்டாலே பொறுப்பிலிருந்து அப்புறப்படுத்த வழிசெய்யும் சட்டம் அடிப்படையிலேயே வேறொரு தீர்ப்பை மீறுகிறது. தேர்தல் மூலம் மக்கள் அளித்த தீர்ப்பு அது என்று பல ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளிலும், ஒன்றியத்திலும் ஒரு கட்சியிடம் அல்லது கூட்டணியிடம் ஆட்சிப் பொறுப்பை அவர்கள்தானே வழங்குகிறார்கள்? அமைச்சர்களையும் முதலமைச்சர்களையும் பிரதமரையும் அவர்கள்தானே தேர்ந்தெடுக்கிறார்கள்?
அவர்களை அவமானப்படுத்துகிற வக்கிரத்தை சட்டத் திருத்தம் என்றே சொல்வதற்கில்லை. தவறாக இருக்கிற ஒன்றைச் சீர்ப்படுத்துவதுதான் திருத்தம். நன்றாக இருப்பதில் ஒரு சீர்குலைவைச் சேர்க்கிற வேலையை எப்படி சட்டத் திருத்தம் என்று அடையாளப்படுத்துவது? அது ஒரு சட்ட வன்மம்தான்.
மறுக்கப்படும் உரிமை
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நியாயமாகச் செயல்படவில்லை என்று மக்கள் கருதுவார்களானால், அவர்களைத் திரும்பப் பெறுகிற (எம்எல்ஏ, எம்பி பதவியிலிருந்து விலக்குகிற உரிமையும் அதிகாரமும் வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும். அதுவே ஜனநாயகத்தின் முழுமை.

அமெரிக்காவின் சில மாநிலங்கள், கனடா, சுவிட்சர்லாந்து உள்பட வேறு சில பகுதிகளில் இந்த “ரீ கால்” உரிமை இருக்கிறது. இங்கேயும் அதைச் செயல்படுத்த வேண்டும் என்ற ஆலோசனை தேர்தல் ஆணையம் அவ்வப்போது நடத்தியிருக்கிற அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆணையமும் அதை ஏற்றதில்லை, ஒன்றிய ஆட்சியாளர்களும் பொருட்படுத்தியதில்லை. ஆனால், அரசியல் உள்நோக்கத்துடன் பிரதிநிதித்துவத்தைப் பிய்த்தெடுக்கும் கைங்கரியத்தில் இறங்குகிறார்கள்.
பெரும்பாலான ஜனநாயக நாடுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குற்றவாளி என நிறுவப்பட்டு, தண்டனை பெற்ற பிறகே பதவி நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த 130 போல, விசாரணையின்றி, வெறும் காவலில் வைக்கப்பட்டதன் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யும் சட்டங்கள் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாகத் தகவல் இல்லை.
இந்த முன்வரைவுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்ன முடிவுக்கு வருகிறதென்று பார்க்கலாம். ஒருவேளை அதன் அங்கீகாரத்தோடு இது சட்டமாகுமானால், உச்சநீதிமன்றத்தின் கதவுகள் நிச்சயம் தட்டப்படும. அப்போது நீதிபதிகள் குழு என்ன முடிவைச் சொல்கிறதென்றும் பார்க்கலாம். இதற்கிடையே, வருமுன் காக்கிற மகத்தான வல்லமை மக்கள் சக்திக்கு இருக்கிறது.
இது சட்டமாகி அரசியல் வன்மம் கட்டவிழ்த்துவிடப்படுமானால், அது ஏற்கெனவே ஒன்றிய–மாநில கூட்டாட்சிக் கோட்பாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள காயங்களை மேலும் குதறிப்போக வைக்கும். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வலிகளைத் தரும். அரசியல் புரிதலும் சமூக அக்கறையும் உள்ள அனைவரும் கட்சி சார்புகளைக் கடந்து ஒரே அணியாய்த் திரண்டு, இந்த முன்னோட்டச் சட்ட முன்வரைவுக்கு வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியாக வேண்டும். அதுவே, அரசமைப்பையே கைப்பற்றும் அடுத்தடுத்த தாக்குதல்களை முறியடிக்கும்.