வைஃபை ஆன் செய்ததும், ‘நடப்பது எல்லாம் நன்மைக்கா? நடப்பது எல்லாம் நல்லதுக்கே இல்லையா?’ என புரியாத கேள்வியை கேட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா ஒரே ‘கலக்கமா? குழப்பமா’?
கலக்கமும் குழப்பமும் நமக்கு இல்லை.. நாட்டு நடப்பை சொன்னேன்..
கரூர் சம்பவத்துக்கு பின்னாடி நடக்கிற விஷயங்களா?
ஆமாய்யா.. ஒவ்வொன்னாக சொல்றேன்… கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில முதல்வர் ஸ்டாலின், நிர்வாக ரீதியாக தமிழ்நாடு அரசு என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செஞ்சுகிட்டே இருக்காரு..
வழக்கம் போல அரசியல் கட்சிகளும் தங்களது ‘கடமையை’ செய்து கொண்டே இருக்கின்றன.
டெல்லியில் இருந்து நேற்று வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “பிரதமர் மோடி அனுப்பினாரு.. நாங்க வந்து பார்த்து ஆறுதல் சொன்னோம்.. நிதி உதவி கொடுத்தோம்.. யார் மீதும் குறை சொல்லறதுக்கு நாங்க வரலை” என்றார்.
எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை.. அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என சொல்லி இருக்கிறாரு…
விஜய்யின் தவெக சார்பில், ஆதவ் அர்ஜூனாவும் சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்துக்கு போயிருக்காரு..
இதே போல பாஜகவும் “பல உயிர்களைக் காவு வாங்கிய கொடூரத்தின் விசாரணையை CBI-க்கு மாற்றுவதில் ஆளும் அரசுக்கு என்ன சிக்கல்? எதற்காக அவசர அவசரமாக ஒரு தனிநபர் விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும்? ” என்கிறது..
அதிமுக, பாஜக, தவெக மூன்றுமே, ஒரே குரலில் சிபிஐ விசாரணை நடத்த சொல்கின்றன..
என்னய்யா நீங்க.. பொதுவாக இப்படி கோரிக்கை வருவது சகஜம்தானே.. இதுல என்ன அரசியல் இருக்கு?
எதிர்க்கட்சிகள் என்றால் இப்படி கோரிக்கை வைப்பது சகஜம்தான்.. அதே நேரத்துல கரூர் சம்பவத்தை முன்வைச்சு உள்ளூர் முதல் டெல்லி வரையிலான பாஜக, தன்னிச்சையாக முன்வந்து விஜய் பக்கம் நிக்குது..
தவெகவுக்காக நீதி கேட்டு பாஜகவே நீதிமன்ற படிகளேறுது..
சென்னை ஹைகோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் முதல்ல கேஸ் போட முயற்சித்தாங்க..
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஹேமமாலினி தலைமையில ஒரு உண்மை கண்டறியும் குழுவையும் அனுப்பி வெச்சிருக்கு..
அப்படியே பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் விஜய்க்காக ரொம்பவே மெனக்கெட்டு பேசுறாங்க..
அதிமுக+ பாஜக+ தவெக மூன்றும் ஒரே லைனில் ‘பார்ம்’ ஆகி இருக்காங்க..
இது போதாதுன்னு டெல்லியில இருந்து அமித்ஷாவும் விடாம விஜய்கிட்ட பேச முயற்சிக்கிறாருன்னு நேற்று நாம டிஜிட்டல் திண்ணையில் சொல்லி இருந்தோம்..
விஜய் பேசவே விரும்பலைன்னு சொன்னாருதான்.. ஆனாலும் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருக்கும் ஜூடிசியல் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் விஜய் தரப்புடன் பேசிகிட்டே இருக்காங்க..
அப்படி என்னதான்யா டெல்லி சொல்லுது? என்னதான் ஸ்கெட்ச்சாம்?
இதுபற்றி டெல்லி சோர்ஸ்களிடம் பேசிய போது, “பாஜகவைப் பொறுத்தவரை கரூர் சம்பவத்தை வைத்து எப்படியாவது விஜய்யை வளைச்சுப் போட்டு கூட்டணியில சேர்த்துவிடனும்னு துடிக்குது.. அதிமுக+ பாஜக+ தவெக- ன்னு திமுகவுக்கு எதிரான ஒரு அணி உருவாகிட்டாலே போதும்.. தமிழ்நாட்டுல இனி நம்ம ஆட்டம்னு நினைக்குது டெல்லி பாஜக..
அதேநேரத்துல திமுகவுக்கும் இந்த சம்பவத்தை வைத்து கடுமையாக நெருக்கடி தந்து டேமேஜ் செய்யனும்னு நினைக்குது.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்சுடனும்னு ரொம்பவே போராடுது பாஜக..
விஜய்க்கு ஏற்கனவே ஒய் பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து,
விஜய் பனையூர் வீடு முன்பாக, தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் போராட்டம் நடத்தினாங்க.. இதனால விஜய்க்கு கூடுதலாக CRPF பாதுகாப்பு கொடுக்கவும் டெல்லி முன்வந்திருக்கு.. இதுக்காக விஜய்கிட்ட ஒரு லெட்டர் வாங்கனும்னு ரொம்பவும் மெனக்கெடுது டெல்லி.. அப்படி CRPF பாதுகாப்பு வளையத்துக்குள்ள விஜய்யை கொண்டு வந்துட்டா அதுக்கு வெளியேதான் ஸ்டேட் போலீஸ் இருக்கும்.. விஜய்யை ஸ்டேட் போலீஸ் நெருங்க முடியாதுன்னு நினைக்குது பாஜக மேலிடம்
இப்படி ‘ஆபத்தான’ நேரத்துல விஜய்க்கு உதவிக் கரம் நீட்டி அரவணைச்சுட்டா, தானாகவே கூட்டணிக்குள்ள விஜய் வந்துதான் ஆகனும்னு நினைக்கிறது டெல்லி பாஜக” என்கின்றனர்.
சரி விஜய் என்ன நினைக்கிறாராம்?
விஜய் தரப்பை பொறுத்தவரைக்கும் எந்த பிடியும் கொடுக்காமல்தான் இருக்கிறார்.. பாஜகவை கடுமையாக விமர்சித்தும் கூட பாஜகவின் பி டீம்னுதான் முத்திரை குத்துறாங்க.. விமர்சிக்கிறாங்க.. இப்ப பாஜக கூட்டணிக்கே போயிட்டா, பத்தோடு பதினொன்று என்கிற நிலைக்கு போயிடுவோம்னு தயங்குகிறார்.. அதனாலதான் அமித்ஷாகிட்ட பேசவும் மறுத்துகிட்டே இருக்கிறார் விஜய்..
திமுக, சிஎம் ஸ்டாலின் ரியாக்சன் என்னவாம்?
இதுபற்றி முதல்வரை சுற்றி உள்ளவர்களிடம் நாம் பேசிய போது, “சிஎம்மைப் பொறுத்தவரைக்கும் எல்லா ஆப்ஷன்களையும் அலசி ஆராய்ந்து நிதானமாக செய்யனும்னு உறுதியாக இருக்கிறார்.. 41 பேர் பலியாகி இருக்காங்க.. இதுக்கு அரசு நிர்வாக ரீதியாக என்ன செய்யனுமோ அதுக்கு முதலில் முன்னுரிமை கொடுப்போம்.. அரசாங்க சைடுல எந்த எக்ஸ்ட்ரீமுக்கு போகாமலும் நாம இருக்கனும்.. அதையே நாம கட்சி ரீதியாகவும் defend செஞ்சுகிட்டு இருப்போம்னு சொல்றாரு..
அதுக்குதான் நேற்று சிஎம் வீடியோவையும் ரிலீஸ் செஞ்சாரு… அதுல கூட, “எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் -அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவர்கள் நம்முடைய தமிழ் உறவுகள்!” என அழுத்தமாகவே சொல்லி இருந்தார்..
திருப்புவனம் அஜித் லாக்கப் மரணத்தை சிபிஐக்கு அரசே மாற்றியது போல கரூர் சம்பவத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்கலாமான்னும் ஒரு ஆலோசனை நடந்துச்சு..
அப்படி, “அரசே சிபிஐகிட்ட கேஸை ஒப்படைச்சுட்டா, எதிர்க்கட்சிகள் வாயை மூடிடலாம்னு”ம் ஆலோசனையில் சொல்லப்பட்டது.
ஆனா சிஎம் (ஸ்டாலின்) வேற ஒரு விஷயத்தை சொல்றாரு.. “இப்ப நாம கரூர் சம்பவத்தை சிபிஐக்கு கொடுத்துடலாம்.. ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்குற நிலையில சிபிஐ விசாரணை முழுக்க திமுகதான் காரணம் என்கிற கண்ணோட்டத்துலயே நம்மை டேமேஜ் செய்யுற மாதிரியே கொண்டு போவாங்க.. நாமதான் ஏதோ குற்றம் செஞ்ச மாதிரி பரப்புவாங்க.. தேர்தல் நேரத்துல செந்தில் பாலாஜி தொடங்கி திமுக நிர்வாகிகளை வம்படியாக விசாரணைக்கு அழைச்சு டென்ஷனாக்குவாங்க.. மீடியாவுல ரொம்ப பெரிசாக்கிடுவாங்க.. அதையும் யோசிக்கனும்.. அதனால நீதிமன்றம் என்ன சொல்லுதோ அதன்படி செய்வோம்”-ன்னு சொன்னார் சிஎம்.
கரூர் சம்பவம் என்னமோ மேலோட்டமாக பார்க்க விஜய்க்குதான் சிக்கல்னு தோணலாம்.. ஆனால் உண்மையிலேயே திமுகவுக்குதான் இது அக்னி பரீட்சைமாதிரி.. இதுல கொஞ்சம் பிசகினாலும் மீண்டு வருவது ரொம்பவே கஷ்டம் என்பதை சிஎம் ஸ்டாலின் நல்லாவே புரிஞ்சிருக்கார் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.