நாளை (ஆகஸ்ட் 21) உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகிறார்.
இன்று மதுரையில் தவெக மாநாடு நடைபெறுகிறது. நாளை திருநெல்வேலியில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது.
பூத் கமிட்டி மாநாட்டுக்கான பணிகளை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த மாநாட்டுக்கு முதலில் பாஜக மூத்த தலைவர்களான நட்டா, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகிய மூவரில் ஒருவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டது.
பின்னர் அமித்ஷா தமிழ்நாடு வருவது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயண விவரங்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, முதலில், டெல்லியில் இருந்து நாளை கேரளா வருகிறார். கேரளாவின் கொச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
காலை 10:45 – 11:45 வரை கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயார்டி ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமித்ஷா, மதியம் 12:00 – 1:30 வரை பாலாரிவட்டம், ரெனை கொச்சின் ஹோட்டலில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார் .
அதைத்தொடர்ந்து தமிழகம் கிளம்புகிறார். மதியம் 2 மணிக்கு கொச்சி விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் புறப்பட்டு, 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகிறார்.
மாலை 3:10 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திருங்குகிறார்.
மாலை 3:25 முதல் 4:55 வரை நெல்லை தச்சநல்லூர், மதுரை பழைய சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இந்த மாநாட்டை முடித்துக்கொண்டு மீண்டும் நாளையே டெல்லி புறப்படுகிறார் அமித்ஷா.
உள்துறை அமைச்சர் வருகையையொட்டி நெல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதியில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் மூலமாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
நாளை நடைபெறும் மாநாட்டில் சுமார் 30 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய, 8,595 பூத் கமிட்டிகளைச் சேர்ந்த, சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.