டெல்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (செப்டம்பர் 3) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் இன்று காலை உணவை முடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு அனைவரும் சென்றனர்.
அமித்ஷா வீட்டில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, கேசவ விநாயகம் ஆகியோருடன் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், தமிழக தேர்தல் நிலவரம், பாஜகவின் நிலவும் உட்கட்சி பூசல், தனித்து செயல்படும் அண்ணாமலை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் சேர வாய்ப்புள்ள கட்சிகள் குறித்தும் ஆலோசனை நடந்ததாகவும் தெரிகிறது.
இந்த ஆலோசனையின் போது, தமிழகத்தில் பாஜக தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உட்கட்சி பூசல் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று கண்டிப்புடன் அமித்ஷா அட்வைஸ் செய்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.