தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று நெல்லையில் அமித்ஷா கூறியுள்ளார்.
நெல்லையில் இன்று (ஆகஸ்ட் 22) பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று நினைக்கிறார். அதுபோன்று தமிழகத்தில் ஸ்டாலின் தனது மகன் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். இவர்கள் இருவருக்கும் இது ஒன்றுதான் அஜெண்டா. ஆனால் இது நடக்காது.
என்னால் தமிழில் பேச முடியாததற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குடியரசு துணை தலைவர் பதவிக்கு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்ததற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திருக்குறளின் வழிகாட்டுதலைப் பிரதமர் பின்பற்றுகிறார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த கட்சி திமுக தான். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். 2024 மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ 18 சதவிகித வாக்குகளை பெற்றது. அதிமுக 21 வாக்குகளை பெற்றது. ஆகவே இந்த கூட்டணிக்கு 39 சதவிகிதம் வாக்குகள் உள்ளது.
130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். இது கருப்பு சட்டம் என சொல்கிறார். இதனை சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை, உரிமையில்லை.
அமலாக்கத் துறை வழக்குகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சிறையில் இருந்துள்ளனர். சிறையிலிருந்து ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா? ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்த முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அமித்ஷா தனது பேச்சில் எங்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.