டிரம்பின் தற்போதைய நடவடிக்கைகளால் ஈரானில் நிலையான அமைதி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. மாறாக, அங்கு குழப்பமான சூழலும், கூடுதல் துயரங்களுமே மிஞ்சப்போகின்றன.
மாக்ஸ் ஹேஸ்டிங்ஸ்
இந்த வாரம் கலிபோர்னியாவிலிருந்து எனக்கு ஒரு சுருக்கமான மின்னஞ்சல் வந்தது. அதில் இப்படி இருந்தது: “வியட்நாமிலிருந்து கற்றுக்கொண்ட இரண்டு பாடங்கள்: 1) வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் இருந்தால் ஒழிய போருக்குச் செல்லாதே. 2) உன் எதிரி எவ்வளவு பலவீனமானவனாகத் தெரிந்தாலும், அவனது மனஉறுதியையும் வளங்களையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதே.” இதை அனுப்பியவர் மைக் ஐலேண்ட் (Mike Eiland). அவர் யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல ஃபிராங்க் ஸ்காட்டன் அல்லது ஃபிராங்க் ஸ்னெப் ஆகிய பெயர்களும் உங்களுக்குப் பரிச்சயமானவை அல்ல.
ஆனால், தங்கள் காலத்தில் இவர்கள் அமெரிக்க உளவுத்துறையின் ஜாம்பவான்கள். பல ஆண்டுகளை வியட்நாமில் கழித்தவர்கள்; அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கசப்பான உண்மைகளைப் பேசவும், வியட்நாம் மக்களுடன் இணைந்து பணியாற்றவும், உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் முயன்றவர்கள். வியட்நாம் போர் குறித்து நான் ஒரு புத்தகம் எழுதும்போது இவர்களைச் சந்தித்தேன். முன்னாள் வீரர்களான அவர்கள் இன்றும் தங்கள் மின்னஞ்சல் உரையாடல்களில் என்னையும் இணைத்துக் கொள்கிறார்கள்.
அமெரிக்காவின் அறியாமையும் போலிவேஷமும்

நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை என்று அவர்கள் கருதுகிறார்கள். விளைவுகளைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் தனது அரசியல் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஒரு மனிதரிடமிருந்துகூட இத்தகைய செயலை எதிர்பார்க்க முடியாது. ஈரான் மீதான தாக்குதல், பீட் சீகரின் பழைய போராட்டப் பாடலை எனக்கு நினைவூட்டுகிறது:
“நாம் சேற்றுப் பள்ளத்தில்
கழுத்துவரை மூழ்கிக் கிடக்கிறோம்,
ஆனால் அந்தப் பெரிய முட்டாளோ,
இன்னும் முன்னேறிப் போகச் சொல்கிறான்.”
டிரம்பின் இந்தப் புனிதப் போர் (Crusade) குறித்து என்னுடைய அச்சம் என்னவென்றால் – அதிபர், வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ அல்லது பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் என யாருக்கும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றியோ அல்லது அங்கிருக்கும் மக்களைப் பற்றியோ எதுவுமே தெரியாது. இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களிடம் என்ன சொல்கிறாரோ அதைத் தவிர வேறொன்றும் அவர்களுக்குத் தெரியாது. வெள்ளை மாளிகை, தேசியப் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவற்றிலிருந்து பல தசாப்தங்களாக அந்தப் பிராந்தியத்தைப் பற்றி ஆய்வு செய்த நிபுணர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் வியட்நாம், ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்காவின் தோல்வியுற்ற போர்களைப் போன்றது அல்ல; ஏனெனில் ஒவ்வொன்றின் சூழலும் வேறுபட்டவை. ஆனால், இவை அனைத்திற்கும் பொதுவான ஒரு காரணியை என்னால் அடையாளம் காண முடிகிறது: அமெரிக்கா இந்தச் சேற்றுப் பள்ளங்களுக்குள் இறங்கியது தனது சொந்த சுயநலத்திற்காகத்தான். தாம் யாரைக் காப்பாற்றப் போவதாகச் சொன்னார்களோ, அந்த மக்கள் மீது அவர்கள் காட்டும் அக்கறை என்பது போலி வேஷமே.

வியட்நாம் குறித்த எனது புத்தகத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன்: வெள்ளை மாளிகையில் இரண்டு தசாப்தங்களாக நடந்த வியட்நாம் போர் குறித்த மூலோபாயக் கூட்டங்களில் அமெரிக்கர்கள் மட்டுமே இருந்தனர். ஒரு வியட்நாமியர்கூட இல்லை. இறுதியில், ஹனோய் நகரத்தின் கொடுங்கோல் தலைவர்கள் போரில் வென்றார்கள்; ஏனெனில் அவர்கள் வியட்நாமியர்கள். ஆனால் சாய்கானில் (Saigon) அமெரிக்காவின் கையாட்களாக இருந்தவர்கள் தங்கள் நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல.
வெளியுறவு தொடர்பான மிக மோசமான தவறு

ஜார்ஜ் டபிள்யூ. புஷ், ஈராக் மீது போர் தொடுத்ததற்கு முக்கியக் காரணம் சதாம் உசேன் மீது அவர் கொண்டிருந்த குடும்பப் பகைதான். பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கிடம் இருப்பதாகப் பொய்ச் சான்றுகளை உருவாக்க அவர் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயருடன் இணைந்தார். 350 அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய வாக்கெடுப்பில், 2003இல் நடந்த ஈராக் படையெடுப்புதான் அமெரிக்க வரலாற்றில் வெளியுறவு தொடர்பான மிக மோசமான தவறு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
டிரம்பின் ஆதரவாளர்கள் (MAGA), முந்தைய அதிபர்கள் செய்ததையே இவரும் செய்கிறார் என்று வாதிடலாம். ஆம், அவர்களும் தாங்கள் எடுக்கப்போகும் ராணுவ நடவடிக்கைகளை ரகசியமாகவே வைத்திருந்தனர்; வெள்ளை மாளிகை இன்றும் அதையே செய்கிறது. பழைய தவறுகள் தொடர்கின்றன. இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ள உலகம் பெரும் விலையைக் கொடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் அந்தப் பாடங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கிறது.
ஈரானில் தனது இலக்குகள் என்ன என்பது குறித்து டிரம்ப் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையைச் சொல்கிறார். ஆட்சி மாற்றம் என்பார், அடுத்த நாள் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அது எங்கள் பட்டியலில் இல்லை என்பார். ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பேன் என்பார். கடந்த ஜூன் மாதமே அதை ஒரே ஒரு குண்டுவீச்சில் அழித்துவிட்டதாகக் கதை விடுவார். அமெரிக்க வீரர்களை அனுப்பாமல் ஈரானை நிராயுதபாணியாக்குவேன் என்பார். பிறகு வீரர்களை அனுப்பவும் கூடும் என்பார்.

வியட்நாம் போரில் சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய ஸ்னெப் சமீபத்தில் எழுதிய மின்னஞ்சலில்: “போரை அறிவிப்பதில் நாடாளுமன்றத்திற்கு (Congress) இருக்கும் அதிகாரத்தை டிரம்ப் அப்பட்டமாக மீறுவது அருவருப்பானது. வியட்நாம் நமக்குக் கற்பித்த பாடம் என்னவென்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசின் இரண்டு பிரிவுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், நிதியுதவியும் ஆதரவும் இல்லாத பேரழிவுதான் மிஞ்சும்.”
டிரம்பின் விசித்திர வியூகங்கள்

கடந்த 14 மாதங்களில் டிரம்பின் போர் முறையைப் பற்றி நாம் தெரிந்துகொண்டது என்னவென்றால், அவர் ஒருபோதும் தனது இலக்குகளைத் தெளிவாகச் சொல்வதில்லை. எனவே அவர் தோல்வியடைந்துவிட்டதாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. அதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் ஒரு புதுக் கதையைச் சொல்லி, தனக்குத் தோன்றும் நேரத்தில் “வெற்றி” என்று அறிவித்துவிட்டு வெளியேறிவிடுவார்; அந்த நாடு என்னவானாலும் அவருக்குக் கவலையில்லை.
அவர் தனது பதவியேற்பு நாளில் உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவதாக வாக்களித்தார். ஆனால், விளாடிமிர் புதினிடம் சரணடையுமாறு வோலோடிமிர் செலென்ஸ்கியை மிரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவர் இப்போது கண்டறிந்துள்ளார். டிரம்பின் ஈரான் முட்டாள்தனத்திற்காக உக்ரைன் குடிமக்கள் பெரும் விலையைக் கொடுப்பார்கள்; ஏனெனில் அமெரிக்காவின் ஆயுதங்கள் மத்திய கிழக்கில் தீர்ந்துகொண்டிருக்கின்றன.
மற்றொரு பக்கம், வெனிசுலாவின் அதிபர் மதுரோவைப் பதவி நீக்கம் செய்வதாகக் கூறித் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த டிரம்ப், இப்போது வெனிசுலா மக்களை மதுரோவின் கூட்டாளிகளின் பொறுப்பில் விட்டுவிட்டு நகர்ந்துவிட்டார்.
ஈரானில் அமைதி நிலவுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. அங்கு குழப்பமான சூழலும், ஈரானியர்களுக்குக் கூடுதல் துயரங்களுமே மிஞ்சப்போகின்றன. பல கொலைகளுக்குக் காரணமான உச்சத் தலைவர் அலி கமேனியின் மறைவுக்காகத் தீவிரவாதிகள் தவிர யாரும் வருந்தப்போவதில்லை. ஆனால், டிரம்ப் ஒரு பெரும் போரைச் சீட்டாட்டம் போலக் கருதுவது ஒரு அதிபருக்கு அழகல்ல.
லிண்டன் ஜான்சன் வியட்நாம் குறித்துத் தவறான முடிவுகளை எடுத்தார், ஆனால் அவர் ஒரு தீவிரமான மனிதர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. டிரம்ப் அப்படியல்ல; அவர் தனது அகங்காரத்தால் இயக்கப்படுபவர். தனது செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் மீது அவருக்கு எந்த இரக்கமும் இல்லை.
நெதன்யாகுவின் சுயநலம்

டிரம்பின் போரால் தனக்கு வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொள்பவர் நெதன்யாகு மட்டுமே. ஈரானைத் தகர்க்க அமெரிக்காவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது வாழ்நாள் லட்சியம். வரும் மாதங்களில் என்ன நடந்தாலும், நெதன்யாகு அடுத்த இஸ்ரேலியத் தேர்தலில் வெற்றி பெறக்கூடும். அது அவரை ஊழல் வழக்குகளிலிருந்து பாதுகாக்கும்; மேலும் மேற்கு கரையை (West Bank) இணைத்து “அகண்ட இஸ்ரேலை” உருவாக்கும் அவரது வெறிக்கு வலிமை சேர்க்கும். இது மேற்கத்திய நாடுகளின் கவனத்திற்கு வராமலேயே படிப்படியாக நடந்துகொண்டிருக்கிறது. நெதன்யாகுவின் இஸ்ரேலுக்குள் அரசியல் உரிமைகள் வழங்கப்படாத பாலஸ்தீனியர்களின் நிலை என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது.
உலகமே டிரம்ப்பும் அவரது குழுவினரும் கொண்டுள்ள அறியாமையைக் கண்டு திகைத்துப்போயுள்ளது. அவர்கள் தடுப்பூசித் திட்டங்களை ரத்து செய்கிறார்கள், பசியால் வாடுபவர்களுக்கான உணவு உதவியை நிறுத்துகிறார்கள், பருவநிலை மாற்றத்தை மறுக்கிறார்கள், உலகளாவிய ஒழுங்கின் தூண்களைத் தகர்க்கிறார்கள் மற்றும் உண்மையை நிராகரிக்கிறார்கள். இப்போது அவர்கள் போர் விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
வியட்நாமிலும் மற்ற இடங்களிலும் உண்மையாகப் போர்க்களத்தில் நின்றவர்களைவிட இவர்கள் போரைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்துள்ளனர். இவர்களின் இந்தத் துணிச்சலான முட்டாள்தனத்திற்கு ஒட்டுமொத்த உலகமும் – குறிப்பாக ஈரான் மக்களும் – பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்
