2015-ம் ஆண்டு ஆம்பூரில் நடந்த வன்முறைகள் தொடர்பான வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்; 22 பேரை குற்றவாளிகள் என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழனி மனைவி பவித்ரா மாயமானார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார் பழனி.
இந்த வழக்கில் பள்ளி கொண்டா இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போது ஆம்பூர் ஷமீல் அகமது என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு பின் ஷமீல் அகமது உடல்நலன் பாதிப்பால் உயிரிழந்தார். ஆனால் போலீஸ் தாக்குதலில் ஷமீல் அகமது உயிரிழந்ததாக கூறி ஆம்பூரில் 2015 ஜூன் 27-ந் தேதி பெரும் போராட்டம் வெடித்தது.
ஆம்பூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் அதிகமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பேருந்துகள், லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீசார் மீதும் கற்களை வீசித் தாக்கினர். இதில் அப்போதைய வேலூர் எஸ்பி செந்தில்குமாரி காயமடைந்தார். இந்த மோதலில் மொத்தம் 54 போலீசார் படுகாயமடைந்தனர். இவர்களில் 15 பேர் பெண் காவலர்கள். இந்த போராட்டம் பல மணிநேரமாக தொடர்ந்து நீடித்ததால் பெரும் பதற்றம் நீடித்தது. ஒருவழியாக போலீசார் அன்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 191 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் 7 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் 118 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி இருந்தது. இவ்வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த திருப்பத்தூர் நீதிமன்றம், 161 பேரை விடுதலை செய்தது. 22 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டதால் திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.