ஆம்பூரில் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் என இன்று (ஆகஸ்ட் 28) தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா மாயமானார். இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் ஷமீல் அகமது என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் உடல்நலப் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், போலீஸ் தாக்குதலில் தான் உயிரிழந்ததாக கூறி ஆம்பூரில் 2015 ஜூன் 27ஆம் தேதி போராட்டம் வெடித்தது.
தொடர்ந்து ஆம்பூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கலவரத்தில் வேலூர் எஸ்பி செந்தில்குமாரி உட்பட 54 போலீசார் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 191 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பளித்த திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, 161 பேரை விடுதலை செய்ததுடன், 22 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து 22 பேருக்குரிய தண்டனை விவரங்களை இன்று மாலை அவர் அறிவித்தார்.
அதன்படி, ஆம்பூர் கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 22 பேருக்கும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
குற்றப்பிரிவுகளுக்கு ஏற்ப ஓராண்டு முதல் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.3,000 முதல் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 2 பேருக்கு 14 ஆண்டுகளும், 6 பேருக்கு 7 ஆண்டுகளும், எஞ்சிய 14 பேருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இரு பெண் காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.