திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையினை புனரமைக்க வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், ஆலையை சீரமைக்க முதல் கட்டமாக ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் பயணமாக வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க ஆராய்ந்து பரிந்துரை வழங்க வல்லுநர் குழு அமைத்து விரைவில் சர்க்கரை ஆலையை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இது அப்பகுதி கரும்பு விவசாயிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது. அதேசமயம் முதல்வர் உடனடியாக நிதி ஒதுக்கி இருக்க வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் எம்.எம்.வீரப்பன் மின்னம்பலத்திடம் கூறுகையில், “திமுக ஆட்சியில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆலை மூடப்பட்டது. தென்னிந்தியாவில் அதிக திறன் கொண்ட எரிசாராய ஆலை இங்குள்ளது. இங்கு விளையும் கரும்பு 10.5 சதவிகித பிழி திறன் கொண்டது. இதனால் அரசு இந்த ஆலையை முறையாக நடத்தும் பட்சத்தில் அரசுக்கும், விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்தோடு பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த நிலையில் வல்லுநர் குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பதிலாக, ஆலையை புனரமைக்க முதல்கட்டமாக குறைந்த பட்சம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்” என்றார்.

அமராவதி ஆலை பிரச்சனையின் பின்னணி
தமிழகத்தில் 1960ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரின் முன் முயற்சியால் முதல் முறையாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் 216 ஏக்கர் பரப்பில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ள நிலையில் 21 ஏக்கரில் கரும்பு ஆராய்ச்சி பிரிவும் தொடங்கப்பட்டது. இதில் 25 ஏக்கரில் கரும்பாலை உள்ளது. கடந்த 1994ம் ஆண்டு எரிசக்தி ஆலையும் தொடங்கப்பட்டது.
கோவை மாட்டம் சூலூர், சுல்தான் பேட்டை, திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோயில், திண்டுக்கல் மாவட்டம் பழநி, வேடசந்தூர், நெய்க்காரப்பட்டி, தொட்டம்பட்டி, ஓட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்புகளை வழங்கி வந்தனர். சுமார் 18,500 கரும்பு விவசாயிகள் இதில் அங்கம் வகித்தனர்.
ஆலையில் நீண்ட நாட்களாக உரிய பராமரிப்பு இல்லாததால் சர்க்கரை உற்பத்தி படிப்படியாக குறைந்து வந்த நிலையில் சுமார் 3 ஆண்டுகளாக முடங்கி உள்ளது.
இதனால் கரும்பு விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு தாங்கள் விளைவிக்கும் கரும்பை வழங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அப்படி வழங்கப்படும் கரும்புக்கு தனியார் நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயிக்க மறுப்பதோடு, நிலுவை தொகையை விவசாயிகளுக்கு வழங்குவதில் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றன.
இந்த பிரச்சனை நீதிமன்றம் சென்ற சூழலில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் இழுத்தடித்து வருதால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.