புதுச்சேரியில் விஜய்யுடன் கூட்டணி : ராகுலிடம் சொல்லும் கிரிஷ் சோடங்கர்

Published On:

| By Kavi

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியும்  கூட்டணி கட்சிகளிடையே தீராத இழுபறி நீடித்து வருகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வரும் 23ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

வேட்புமனு தாக்கல் செய்ய ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில், புதுச்சேரி திமுக – காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது.

திமுக கூட்டணியில் அக்கட்சியின் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையிலும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடந்தது.

ADVERTISEMENT

மொத்தமுள்ள 30 தொகுதிகளில், சரிபாதியாக நாங்கள் 15 தொகுதிகளில் நிற்போம், நீங்கள் 15 தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்று திமுக கூறியது.

இதற்கு கிரிஷ் சோடங்கர் ஒத்துக்கொள்ளவில்லை. 12 தொகுதிகள் தான் தர முடியும் என்று சொன்னார். இதனால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாகவே நேற்று, புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட திமுக எம்எல்ஏவாக இருக்கும் சம்பத் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இதுபோன்ற சூழலில் கிரிஷ் சோடங்கர், டெல்லி சென்றுள்ளார். அங்கு ராகுலை பார்த்து “நாம் ஏன் புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடக் கூடாது? அவர்களும் ரெடியாக இருக்கிறார்கள்” என கேட்கவுள்ளார் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்

இன்னொரு பக்கம், என்.ஆர்-காங்கிரஸ் பாஜக கூட்டணியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மார்டின் மகன் கட்சியான  ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க பாஜக கூறி வருகிறது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி இதை மறுத்து வருகிறார். அதனால் இந்த கூட்டணிலும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.

இந்தசூழலில் ரங்கசாமி, தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறார்.

தவெகவை பொறுத்தவரை தமிழகத்தில் அக்கட்சியுடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை. ஆனால் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே பேசுவதால் இதுதொடர்பாக தவெக தலைமையும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் 14, திமுக 13 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் திமுக 6 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸால் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அதுபோன்று என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share