2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தொடங்கியுள்ளன.
இதில், ஆட்சியில் பங்கு என்று கூறி வரும் விஜய்யின் தவெக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் வெற்றி பெற சாத்தியம் இருக்கிறதா? அல்லது எந்த கட்சி வாக்குகளை அவர் பிரிப்பார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்தநிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் விஜய்க்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் 2006 தேர்தலின் போது எப்படி ஒரு தாக்கத்தை கொடுத்தாரோ, அதேபோல் விஜய் 2026ம் ஆண்டு தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன்.
அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். நான் சொல்வது எதார்த்தம். அதற்காக கூட்டணி போகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் எப்போதும் எதார்த்தத்தை பேசுபவன்.
நான் கேள்விப்பட்டதையும், சர்வே எடுப்பவர்கள், ஊடகவியலாளர்கள் சொல்வதைப் பார்த்தால் தவெக இந்த முறை தாக்கத்தை உண்டாக்கலாம் என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
டிசம்பர் மாதத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், “முன்னாள் முதல்வர் ஓபிஎஸை டெல்லி பாஜக தலைவர்கள் மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வருவது நல்லது என அனைவருக்கும் தெரியும்” என்றும் குறிப்பிட்டார்.