திமுக கூட்டணியிலே நீடிக்கிறோம்.. எதிர்பார்ப்பு என்ன? வேல்முருகன் ஓபன் டாக்

Published On:

| By Mathi

TVK Velmurugan

திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து பயணிக்கிறது; சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் இடங்களை திமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும் என்பது தவாக நிர்வாகிகளின் விருப்பம் என்று அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வேல்முருகன் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இருக்கிற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்- செயலாளர்களை அழைத்து கடந்த 4 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறோம். கட்சியை வலுப்படுத்தும் பணிகள், கட்சி வலுவாக இருக்கும் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் நீடிப்பு

இந்த நிமிடம் வரை திமுக தலைமையிலான கூட்டணியில்தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீடிக்கிறது.
ஏற்கனவே இரண்டு நாடாளுமன்ற தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் நாங்கள் இடம் பெற்ற திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

பாஜக கூட்டணியில் சேர முடியாது

பாஜக தலைமையிலான மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்துகிற, மதத்தின் பெயரால் மனித படுகொலைகளை நடத்துகிற கூட்டணியில் கொள்கை அளவில் நாங்கள் இடம் பெற முடியாது. ஆகையால்தான் ஏற்கனவே தெளிவான ஒரு முடிவை எடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் பயணித்து வருகிறோம்

ADVERTISEMENT

திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்போம்

எங்களுடைய கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாற்று அரசியல் கட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கான உறவுகள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்திருக்கிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகள் கூட தங்களுடைய கட்சியை தமிழக வாழ்வுரிமை கட்சியோடு இணைத்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நாம் இந்த தேர்தலில் வாய்ப்பை உருவாக்கி தர வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதனால் நாம் இடம் பெற்றிருக்கிற திமுக தலைமையிடம் கூடுதல் இடங்களை கேட்டுப் பெற்று சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நம்முடைய குரல் ஒலிக்க வேண்டும் என்கிற கருத்தை எங்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விழாவில் ஏன் பங்கேற்கவில்லை?

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவதால் முதல்வர் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களோடு அந்த விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.

ஒரு தொகுதியை ஏற்க முடியாது

எங்களைப் பொறுத்தவரையில் ஒரு தொகுதியைப் பெற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சி நிர்வாகிகள் பெரும்பான்மையினருடைய கருத்து. திமுக தலைமை இதுவரை எங்களுக்கு அப்படி சொல்லவில்லை, அப்படி ஒருவேளை திமுக தலைமை எங்களுக்கு சொன்னால் அது குறித்து எங்கள் கட்சியினுடைய பொதுக்குழுவை கூட்டி உரிய முடிவுகளை நாங்கள் எடுப்போம். இப்போதைக்கு நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்கிறோம். இவ்வாறு பண்ருட்டி தி.வேல்முருகன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share