தற்போதைய மதுரை ஆதீனம், புதிய ஆதீனத்தைத் தேர்ந்தெடுப்பதில் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி மதுரையில் மறைந்த ஆதீனம் அருணகிரிநாதர் சமாதியில் ஸ்ரீமத் விஷ்வ லிங்க தம்பிரான் நேற்று (ஆகஸ்ட் 31) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பினார்.
இந்நிலையில் இன்று மதுரை ஆதீன மட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மதுரை ஆதீன மடத்தில் 2018 முதல் தம்பிரானாக உள்ள ஸ்ரீமத் விஸ்வ லிங்க தம்பிரான் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ’தற்போதைய மதுரை ஆதீனமாக உள்ள ஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதில் இருந்து பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீன மடத்தின் விதிகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக மடத்தில் அரசியல் கலக்கப்படுகிறது. ஆதீனம் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். மேலும் சகோதரத்துவத்திற்கு எதிராகப் பேசி மடத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்துகிறார் என அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிரான், கடந்த மே மாதம் நடந்த கார் விபத்து தொடர்பாக மதுரை ஆதினத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே மட விவகாரங்களிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும். மடத்தில் ஆதீன மரபுகளைப் பின்பற்றுவது இல்லை. முறையாகப் பூஜைகள் செய்யப்படுவது இல்லை. தற்போதைய ஆதீனம் குழந்தை போல் செயல்படுகிறார். மடத்தில் அரசியல் கலப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட வேண்டும். ஆதீன மடங்கள் ஒன்று சேர்ந்து என்னை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக அறிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.