அஜித்குமார் லாக்கப் மரணம்- அரசுதான் பொறுப்பு: எஸ்பியை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? நீதிபதிகள் சரமாரி கேள்வி

Published On:

| By Minnambalam Desk

Lockup death Case Court

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரணம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்; துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறை என்பது அடிப்பதற்காகவா இருக்கிறது? அஜித்குமார் மரணத்துக்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சரமாரியாக சாடியுள்ளது. Ajithkumar Lock-Up Death

அஜித்குமார் லாக்கப் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் நேற்று ஜூன் 30-ந் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்எம் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளீட் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது பொதுநல மனுவாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் மாரீஸ்குமார் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து முறைப்படி மனுத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் மாரீஸ்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மரணமடைந்த அஜித் குமார் என்ன தீவிரவாதியா? சாதாரண வழக்கில் கைதானவரிடம் எந்தவிதமான ஆயுதமும் வைத்திருக்காத ஒருவரை அடித்து காவல்துறை கொலை செய்துள்ளதா? தமிழகத்தில் இதுவரை 24 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டுப்படுகிறதே? அதுதொடர்பான விவரம் எங்கே? எனவும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இன்றும் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

  • நகை திருட்டு சம்பந்தமாக அஜித்குமாரை ஏன் போலீசார் வெளியே வைத்து விசாரணை நடத்தினர்?
  • அஜித்குமாரை காவல் நிலையத்தில் வைத்து ஏன் விசாரணை செய்யவில்லை?
  • இந்த வழக்கில் 5 போலீசார் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். ஏன் காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?
  • அஜித்குமார் மரண சம்பவத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உடனே சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டாமா?
  • நகைகள் எப்போது திருட்டு போனது? நகை திருட்டு வழக்கு எப்போது பதிவானது?
  • காவல்துறையில் உள்ள அனைவர் மீதும் நாங்கள் குற்றம்சாட்டவில்லை. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • அடிப்பதற்காகவா காவல்துறை இருக்கிறது? ஏன் இந்த வழக்கில் முழு உண்மையையும் காவல்துறை சொல்ல மறுக்கிறது?

என நீதிபதிகள் எஸ்எம் சுப்பிரமணியம், மரியா கிளீட் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இன்றைய விசாரணையின் போது, நகை திருடு போனதாக புகார் கொடுத்தவர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரியின் உறவினர்; அதனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமலேயே விசாரணை நடத்தினர். என்று வழக்கறிஞர் ஹென்றி சுட்டிக் கட்டினார்.

அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், திருப்புவனம் எஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் அஜித்குமாரை ‘நன்றாக கவனிக்குமாறு’ கூறியதாக ஹெட்கான்ஸ்டபிள் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அஜித்குமார் மரணத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர் நீதிபதிகள். மேலும் இந்த வழக்கில் டிஜிபி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share