நகை திருட்டு புகாரில் போலீசாரால் விசாரிக்கப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளார். Ajithkumar Lock-Up Death
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அஜித்குமார் மரணம் தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, “எஸ்பி, டிஎஸ்பி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ” என கேள்வி எழுப்பி இருந்தது. இந்த நிலையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.