அஜித்குமார் லாக் அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ajithkumar lock up death chennai high court order
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடபுரத்தைச் சேர்ந்த அஜித்குமாரை நகை திருட்டு வழக்கில், ஜூன் 27ஆம் தேதி மானாமதுரை உட்கோட்ட சிறப்பு படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
போலீஸ் விசாரணையில் அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் மாரிஸ் குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 1), நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பிரேத- பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் அஜித்குமாரின் பிரேத- பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மனித உரிமை போராளியும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் ஆஜராகி, “காவல்துறையினர் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளை கொண்டு தாக்கியுள்ளனர்” என்று கூறி சில புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
போலீசார் அஜித் குமாரை தாக்கும் வீடியோவும் போட்டு காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர் ஹென்றி திபேன், “முதலில் தென்னை தோப்பில் வைத்து அஜித்குமாரை போலீசார் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். போலீசார் அஜித்குமாரை தாக்கும் போது, அந்த சமயத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் தான் இருந்துள்ளார்.
அஜித் குமார் இறந்த பிறகு அவரது உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது.
அஜித் குமாரின் தாயாரும் சகோதரரும் 28ஆம் தேதி இரவு 12 மணி வரை மகன் குறித்து போலீசாரிடம் கேட்டுள்ளனர். அப்போது திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்பி, அஜித் குமார் அம்மாவிடம் உங்கள் மகன் இறந்துவிட்டார் என தெரிவித்திருக்கிறார்” என வாதங்களை முன் வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “நகை காணாமல் போனது தொடர்பாக எப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பில், “ஜூன் 28ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. புகார் அளித்ததும் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது” ன்று பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கறிஞர் ஹென்றி, “இது முழுக்க முழுக்க சட்டவிரோதமாக நடந்த காவல் மரணம். தலைமை காவலர் கண்ணன் மானாமதுரை டி.எஸ்.பி யின் சிறப்புப்படையில் உள்ளவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்தது விதி மீறலாகவே கருத வேண்டும். விசாரணையின் போது அஜித்குமார் தப்பித்து ஓட முயன்றதாக காவல்துறை கதை கட்டுகிறது.
திமுகவின் சேங்கைமாறன்(அவரது மனைவி பஞ்சாயத்து தலைவர்) திருப்புவனம் திமுக செயலர் மகேந்திரன், மானாமதுரை டி.எஸ்.பி உள்ளிட்டோர் அஜித்குமார் இறந்த பிறகு அவரது குடும்பத்தினரிடம் 50 லட்சம் ரூபாய் தருவதாக சமரசம் பேசியுள்ளனர்.
உடற் கூராய்வு தொடங்குவதற்கு முன் அஜிக்குமாரின் உடலை முழுமையாக பார்க்க அவரது தாய் மற்றும் சகோதரரை காவல்துறை அனுமதிக்கவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையை அஜித்குமாரின் தாயிடம் வழங்கவில்லை.போலீசார் கோயிலில் இருந்த அனைத்து சிசிடிவிகளையும் நீக்கியுள்ளனர்” என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

வழக்கறிஞர் மாரிஸ் குமார் ஆஜராகி, “காவல்துறையினர் 6 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் 5 பேர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அஜித் குமாரை நன்றாக கவனியுங்கள் என்று கூறியதாக சிறப்பு விசாரணை குழுவின் தலைமை காவலர் கூறியுள்ளார். ஆகவே அவர்கள் இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.
புகார் கொடுத்த நிகிதா ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் உறவினர் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் அஜித்குமாரை தாக்கியுள்ளனர்” என்று வாதங்களை முன் வைத்தார்.
இதையடுத்து மதியம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது அரசு தரப்பில், “தவறு செய்தவர்கள் மீது நிச்சியம் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்களுக்கு ஒருபோதும் அரசு ஆதரவாக இருக்காது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “நகை காணாமல் போன வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது ஏன்?.
போலீஸார் மாமூல் வாங்குவது தொடர்பாக பல வீடியோக்கள் வருகின்றன. இது தொடர்பாக சிறப்புப்படை விசாரித்து 2 மணி நேரத்தில் நிறுத்த முடியும் என்றால் நிறுத்துங்கள். இது குறித்து விசாரிப்பீர்களா?
சிறப்பு படை எந்த அடிப்படையில் யார் சொல்லி இந்த வழக்கை கையில் எடுத்தது?
நகை திருட்டு வழக்கை தனிப்படையிடம் ஒப்படைத்தது யார்? அவர்களாகவே இந்த வழக்கை கையில் எடுத்து விசாரிக்க முடியுமா?
உயர் அதிகாரிகளை காப்பாற்ற முழுமையான விவரங்களை மறைக்கிறீர்களா? மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும்? புலனாய்வு செய்வதற்கு தான் காவல்துறையே தவிர அடிப்பதற்கு அல்ல.
அஜித் குமாரை இரண்டு நாட்களுக்கு வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி சுற்றி விசாரிக்க யார் அதிகாரம் கொடுத்தது?
அனைவர் மீதும் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? போலீசார் உயர் அதிகாரிகளின் சட்ட விரோத கட்டளைகளுக்கு அடி பணிய வேண்டிய அவசியம் இல்லை.
மாஜிஸ்திரேட்டுக்கு உடனடியாக பிரேதப் பரிசோதனை அறிக்கையை அனுப்பாதது ஏன்?
மாஜிஸ்திரேட்டை அப்பகுதி மக்களை ஏன் சந்திக்க அனுமதிக்கவில்லை?
காவல்துறை மற்றும் நீதித்துறை சேர்ந்தவர்களின் குடும்பங்களில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களை காப்பதற்காகத்தான், அடிப்பதற்காக இல்லை.
தமிழ்நாடு கல்வி அறிவு கொண்ட மாநிலம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டனர்.
அப்போது அரசு தரப்பில், “அஜித் குமார் இரவு 8:00 மணி முதல் 10:30 மணிக்குள் இறந்திருப்பார். தொடக்கநிலை விசாரணை முடிந்த பிறகு தான் வழக்குப்பதிவு செய்ய முடியும்” என்று பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் ஆகியோர் 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜரான வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன், கோயில் பின்புறத்தில் உள்ள கழிவறையில் மறைந்திருந்து இந்த வீடியோவை எடுத்ததாகவும், பின்னர் போலீசுக்கு பயந்து சற்று நேரத்தில் வெளியே வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை எஸ்ஐ ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாக கோவில் உதவியாளர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதை விசாரித்த நீதிபதிகள், சம்பவ இடத்தில் சாட்சியங்களை சேகரித்தது யார்? அங்கு ரத்தக் கறைகள், சிறுநீர் அடையாளங்கள் இருந்ததா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பில் எந்த ரத்தக்கறையும் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், “அப்படியானால் எஸ்பி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தான். சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதா?
காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்படவில்லை? அதன் சிசிடிவி காட்சிகள் இல்லை. அதுபோன்று கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டனர்.
இதற்கு அரசு சார்பில், ”உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், “போலீசார் கைது செய்யப்பட்டது எல்லாம் கண்துடைப்பு நாடகம். வரும் காலத்தில் எந்த போலீசாரும் இதுபோன்ற நடந்து கொள்ள கூடாது” என்று தெரிவித்தனர்.
அப்போது அரசு தரப்பில், ”எதிர்க்கட்சிகள் இதை அரசியல் செய்ய நினைக்கிறார்கள்” என்று கூற,
நீதிபதிகள், “நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதைத்தானே செய்வீர்கள். சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.

அஜித் குமாரின் பிறப்புறுப்பிலும் வாயிலும், காதுகளிலும் மிளகாய் தூள் போடப்பட்டுள்ளது.
அஜித் குமார் தாய் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
50 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசியுள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக உறுதியளித்துள்ளனர்.
அரசு இந்த வழக்கை உணர்வுப்பூர்வமாக எடுத்து நியாயமான விசாரணையை சிபிசிஐடியின் சிறப்புக் குழுவால் நடத்த வேண்டும்” என்று கூறினர்.
அப்போது அரசு தரப்பில், “வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் கூட எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அரசு இந்த விஷயத்தில் நேர்மையாக உள்ளது. யாருக்கும் சாதகமாக இல்லை” என்று பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் உள்ளன. கொலை செய்பவர் கூட இது போன்று கடுமையாக தாக்கமாட்டார்.
காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் கோயில் வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் ஹார்டு டிஸ்க்களை எடுத்துச் சென்றுள்ளார்.
தொடர் லாக்கப் மரணங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
இந்த வழக்கில் காவல் நிலையம் மற்றும் கோயில் என அனைத்து இடங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும். அதை மாற்றவோ அழிக்கவோ கூடாது.
இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்ய வேண்டும். அரசு தரப்பில் இதற்கு பொறுப்பான காரணமான உயர் அதிகாரிகள் முதற்கொண்டு அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திருபுவனம் காவல் ஆய்வாளர், சிவகங்கை எஸ்பி விசாரணை அதிகாரி ஆகியோர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மதுரை மாவட்ட நீதிபதியிடம் நாளை (ஜூலை2) வழங்க வேண்டும்.
நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முழுமையாக விசாரணையை தொடங்க வேண்டும். முதற்கட்ட விசாரணை அறிக்கையை வரும் ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கில் அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளார் என்றும், மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ajithkumar lock up death chennai high court order