நான் விஜய்க்கு நல்லதை மட்டுமே நினைத்திருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நடிகர் அஜித் குமார் பேட்டியளித்த போது, கரூர் சம்பவத்தை பொறுத்தவரை தனிநபர் மட்டுமே காரணம் இல்லை. நாம் எல்லோருமே பொறுப்பு ரசிகர்களின் அளவு கடந்த அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டி காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். ஆனால் அது உடனடியாக முடிவுக்கு வரவேண்டும். இது முழு சினிமா துறையையும் மோசமாக காட்டுகிறது என்றார். அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ஒரு தரப்பினர் அஜித், விஜய்க்கு ஆதரவாக பேசினார் என்றும், மற்றொரு தரப்பினர் விஜய்க்கு எதிராக பேசியதாகவும் கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அஜித், “ஆங்கில ஊடகத்திற்கு நான் கொடுத்த பேட்டி, இளைஞர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக ஒரு சிலரால் அவர்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியும்.
இங்கே எதையெடுத்தாலும் பரபரப்பாகத்தான் முயல்வார்கள். இன்று அரசியல் பத்திரிகையாளர்களைவிட ஒரு சில சினிமா பத்திரிகையாளர்ளே மிகவும் அரசியல் மயமாகியுள்ளனர்.
என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை. அஜித்துக்கும், விஜய்க்கும் இடையிலான மோதல், அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையிலான போர் என்பதுபோல காட்டுகின்றனர். நீங்க இந்த விஷயத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்னுடைய இந்த ஆங்கில ஊடகத்திற்கான பேட்டி சுமார் 20 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறிருக்கும்.
நான், உங்களையும் உங்கள் குடும்பங்களையும் முதலில் பாத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பார்ப்பதற்கு தகுதியானது என நினைத்தால் என் படத்தை பாருங்கள் என்று தான் சொல்லி வருகிறேன். படத்தை பாருங்கள் என்று மக்களை வற்புறுத்த செய்யமாட்டேன். ஓட்டும் கேட்டும் வரமாட்டேன்.
கார் ரேஸ், படங்களில் நடிப்பது என எனக்கு பிடித்தவற்றில் கவனம் செலுத்துவேன். எப்போதெல்லாம் ரேஸ் காரில் அமர்கிறேனோ, அப்போதெல்லாம் உயிர் போவதற்கு ஒரு நொடி போதும் என எனக்கு நன்றாக தெரியும். வாழ்க்கை மிக எளிதில் உடையக்கூடியது. அதனால் எனக்கு எந்தொரு திட்டமும் உள்ளோக்கும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
கரூரில் நடந்தது துரதிஷ்டவசமானது. அது நீண்ட நாள்களாக நடக்கக் காத்திருந்த ஒரு விபத்து. இதற்கு முன் ஆந்திர சினிமா திரையரங்கில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானம் பகுதியில் நடந்தது. பல நாடுகளில் நடந்திருக்கிறது. அதனால் பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள், நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர், அமைதியாக இருப்பது நல்லது. நான் விஜய்க்கு நல்லதை மட்டுமே நினைத்திருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன். எல்லோரும் அவர்கள் குடும்பங்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நான் வாழ்த்துகிறேன்.
இதற்கிடையில் என்னுடைய பூர்வீகம் அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகிறது. ஒரு நாள் வரும், அன்று இதே நபர்கள் என்னை உரத்த குரலில் தமிழன் என்று அழைப்பார்கள். கார் ரேஸில் சாதித்து இந்த மாநிலத்திற்கும், இந்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
