அஜித்குமார் லாக் அப் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

Published On:

| By Kavi

Ajith Kumar lock-up death case

இளைஞர் அஜித்குமார் லாக் அப் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். Ajith Kumar lock-up death case

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த ஜூன் 28ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார், போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடியின் சிறப்புக் குழுவால் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. இதற்கு அரசு தரப்பில், சிபிஐக்கு மாற்றக் கூட அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தசூழலில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 1) பிறப்பித்த உத்தரவில், ”இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

நேற்றைய தினம் , 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது.

இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும். 

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்தது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்.

காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை.

திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.

தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். Ajith Kumar lock-up death case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share