விமான விபத்தில் உயிரிழந்த அஜித்பவார் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா துணை முதல்வரான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) நிறுவனர் சரத் பவார் அவர்களின் அண்ணன் மகன் ஆவார். கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக சரத் பவாரிடமிருந்து விலகி, நீதிமன்றத்திற்குச் சென்று தேசிய காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அஜித் பவார், 2010 முதல் 2014 வரையிலும், 2019 முதல் தற்போது வரையிலும் அம்மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். அஜித் பவார் முதல் முறையாக 1991இல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் 1995, 1999, 2004, 2009, 2014, 2019 மற்றும் 2024 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதில் 1991 மற்றும் 1995 தேர்தல்களில் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார்; பிறகு என்சிபி சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில், தனது சொந்தத் தொகுதியான பாராமதிக்கு தனி விமானம் மூலம் இன்று காலை அஜித் பவார் புறப்பட்டார்.
எதிர்பாராத விதமாக விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியதில் அஜித் பவார் உட்பட ஆறு பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பாராமதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஜித் பவார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், “மாண்புமிகு மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்டோர் துயரமான விமான விபத்தில் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தச் சோகத்தின் அளவை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே அவர்களுக்கும், இந்தக் கொடூரமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பு கொண்ட ஒரு மக்கள் தலைவராக அஜித் பவார் திகழ்ந்தார். மகாராஷ்டிரா மக்களின் சேவைக்கு முன்னிலையில் நின்று உழைத்தவர். நிர்வாக விஷயங்களில் அவருக்கிருந்த புரிதலும், ஏழை எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற பேராவலும் குறிப்பிடத்தக்கவை. அவரது அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
