அஜித் பவார் உயிரை வாங்கிய விமான விபத்து… காலையில் என்ன நடந்தது?

Published On:

| By Kavi

விமான விபத்தில் சிக்கி மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை கூறியுள்ளது.

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் இன்று (ஜனவரி 28) பாராமதி தொகுதியில் நடைபெறவிருந்த நான்கு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள இருந்தார்.
இதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் பாராமதிக்கு புறப்பட்டார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் நான்கு பேருடன்  பாம்பார்டியர் லியர்ஜெட் 45XR (Bombardier Learjet 45XR) விமானம், இன்று காலை 8:10 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, தேர்தல் பணிகளுக்காக புனே மாவட்டத்திலுள்ள பாராமதிக்கு புறப்பட்டது.
முதலில் காலை 8.30 மணியளவில் இந்த விமானம் பாராமதியில் தரையிறங்க முற்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்களின் கூற்றுப்படி,  மோசமான பார்வை தெளிவின்மை ( poor visibility) காரணமாக விமானத்தை தரையிறக்க முடியவில்லை.
இரண்டாவது முறையாக பாராமதி விமான நிலைய ரன்வே 11ல் தரையிறக்கப்பட்ட போது, ஓடு பாதையின் தொடக்கப்பகுதிக்கு அருகில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
இந்த விபத்தின் போது 4 அல்லது 5 முறை விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக இதை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த விமானம் VTSSK, LJ45 வகையைச் சேர்ந்த சிறிய ரக விமானம் ஆகும்.
லியர்ஜெட்-45  LJ45  ஒரு நடுத்தர விமானமாகும். கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
இந்த லியர்ஜெட் விமானம், பல வாடகை விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
இது இரண்டு ஹனிவெல் TFE731-20AR/BR டர்போஃபேன் இன்ஜின்களால் இயக்கப்படுகிறது.
இன்று விபத்துக்குள்ளான விமானம் 2010 ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
இந்த விமான விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில், ‘காலை 8.48 மணியளவில் விமானம் தரையிறங்கிய நேரத்தில், அந்த இடத்தில் பார்வைத் தெளிவு குறைவாக இருந்தது என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும்.
விமானம் தரையிறங்குவதற்கு முன்பு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ATC) விமானியிடம் ஓடுபாதை கண்ணுக்குத் தெரிகிறதா என்று கேட்டிருக்கிறது, அதற்கு அவர் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து மீண்டும் மேலே பறந்துவிட்டு, விமானம் தரையிறங்குவதற்காகத் திரும்பியது. அப்போதும், தரையிறங்குவதற்காக ஓடுபாதை தெரிகிறதா என்று விமானியிடம் மீண்டும் கேட்கப்பட்டது.
அப்போது, விமானி ஓடுபாதை தெரிவதை உறுதிப்படுத்தியிருக்கிறார். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் தரையிறங்க அனுமதி அளித்த பிறகு, தரையிறங்கும் சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்தது’ என்று கூறியுள்ளார்
முன்னதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share