சென்னை விமான நிலையம், எம்.பி.கனிமொழியின் வீடு, பெரியார் திடல் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சமீப நாட்களாக தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கும், அரசியல் கட்சியினரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ண உள்ளன.
இந்தநிலையில், திருவான்மியூரில் உள்ள தமிழக முன்னாள் டிஜிபி நட்ராஜ், மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, பெரியார் திடல் ,திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஆகியோரின் வீடுகளுக்கு இன்று (அக்டோபர் 4) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். முடிவில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை, அந்த மின்னஞ்சலில் வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.
அதுபோன்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த அந்த குண்டுகள் வெடித்து சிதறும் என்று விமான நிலைய மேலாளர் முகவரிக்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து அங்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள இஸ்கான் கோயிலிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அந்த தகவலும் புரளி என உறுதி செய்யப்பட்டது.
இந்தசூழலில் தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஞானமூர்த்தி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதவிர இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்று தொடர்ந்து விசாரணை செய்து வரும் போலீசார், அவர்கள் யார் என கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
நேற்று முதல்வர் வீடு, நடிகை த்ரிஷா வீடு உள்ளிட்ட இடங்களுக்கும் மிரட்டல் வந்தது.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம், ஆளுநர் மாளிகை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு, கோவை ஆட்சியர் அலுவலகம் என பல இடங்களுக்கும் மிரட்டல் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.