பெண் யாருடைய கனவு பொருளும் அல்ல – நயன்தாரா குறித்த சிவி சண்முகம் பேச்சுக்கு மாதர் சங்கம் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nayanthara

பெண் யாருடைய ‘கனவு பொருளும் அல்ல, பெண் சுதந்திரமாக சுயமரியாதையாக கண்ணியத்தோடு சமூகத்தில் வாழ உரிமையானவள் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் சுட்டிக்காட்டி உள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் இன்று (மார்ச் 17) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக அரசின் உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சிக்கும் வகையில் என்று நயன்தாரா பெயரை குறிப்பிட்டு அருவருக்கத்தக்க வகையில் பேசினார். அவரது கருத்துக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்திட கோரி என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தை விமர்சிக்கும் பெயரில், “எனக்கு ஒரு கனவு என ஆரம்பித்து தமிழ்நாட்டின் பிரபல பெண் திரைக்கலைஞர் பெயரை சொல்லி அவர் வேண்டும் என்றும் அடுத்ததாக அவரை திருமணம் செய்ய விருப்பம் என்று யாராவது சொன்னால் திருமணம் செய்து வைப்பாரா?” எனப் பேசியிருப்பது, அரசியல் கேலி என்ற பெயரில் பெண்களை முழு மையாக அவமதிக்கும் ஒரு அருவருப்பான ஆணாதிக்க மொழி வன்முறையாகும்.

இது ‘கருத்து’ அல்ல,விமர்சனமும் அல்ல, பெண்களை மனிதர்களாகவே பார்க்க மறுக்கும், அவர்களின் உரிமை விருப்பம், சுதந்திரம் அனைத்தையும் அழித்து ஒழிக்கும் பாலின ஆதிக்க அரசியல் வன்முறை.

ADVERTISEMENT

சி.வி சண்முகத்தின் பேச்சு, பெண்களை உயிரும் உணர்வும் உள்ள சக மனுசியாக பார்க்காமல் நுகர்வு பொருளாக, உரிமை, சுதந்திரம், கருத்து , விருப்பம் எதுவும் இல்லாதர்களாக பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சி .வி சண்முகம் போன்றோர் தொடர்ச்சியாக இது போன்று அருவருக்கத்தக்க ஆணாதிக்க பெண்ணுரிமைக்கு எதிரான கருத்துக்களை பேசி வருவதை தமிழக பெண்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

சி.வி சண்முகத்தின் இத்தகைய பேச்சுக்கு எதிராக போராட்டங்களை தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலுவோடு நடத்தும்.

ADVERTISEMENT

அரசியல் மேடையைப் பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு, சமூகத்தில் ஏற்கனவே நிலவும் ஆணாதிக்க வன்முறைக்கு அரசியல் ஒப்புதல் அளிப்பதாகும் .
பெண்களை இழிவுபடுத்தும் இந்த மனநிலையையும் சி.வி சண்முகத்தின் பேச்சையும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆதரிக்கிறதா என்பதைஅக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.

சி.வி சண்முகத்திற்கு எதிராக தமிழக காவல் துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களை அவமதிப்பது, அவமதிக்கும் பேச்சுக்கு எதிரான வழக்கு , என இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பெண்களை இழிவுபடுத்தும், பாலியல் அருவருப்பு,ஆபாச ,பொதுப் பேச்சுகளை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.பெண்களை பொருளாக பார்க்கும்,பாலியல் ஒடுக்குமுறை கலந்த அரசியல் பேச்சுகளுக்கு எதிராக சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

பெண் யாருடைய ‘கனவு பொருளும் அல்ல, பெண் சுதந்திரமாக சுயமரியாதையாக கண்ணியத்தோடு சமூகத்தில் வாழ உரிமையானவள். இதற்கு எதிரான நோக்கத்தோடு எந்த இடத்தில் இருந்தும் கருத்து வந்தாலும் அதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அனுமதிக்காது. பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க அரசியல் மொழிக்கு எதிராக, பெண்களின் மரியாதையை கேலி செய்யும் குரலை — அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முறியடிப்போம். என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share