இஸ்ரேல் ராணுவத்தால் பாதிக்கப்பட்ட காசா பகுதிக்குச் செல்லும் கப்பல்களை சிறைபிடித்ததுடன், அதிலிருந்த கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் இன்று (அக்டோபர் 2) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் – காசா இடையேயான போர் இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் போரில் இதுவரை 66,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் கண்டங்களும் போராட்டமும் வெடித்துள்ளன.
இதற்கிடையே பசியால் வாடும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக உணவு, மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு Global Sumud Flotilla (உலக மனிதநேய கப்பற்படை) என்ற அமைப்பின் கீழ் நிவாரண கப்பல்கள் காசாவை நோக்கி சென்று உதவி வருகின்றன.
எனினும் காசா கடற்கரையிலிருந்து சுமார் 70 கடல் மைல் தொலைவில் அந்த கப்பல்களை இஸ்ரேல் கடற்படை இன்று சிறைபிடித்தது.
மேலும் அதிலிருந்த பொருட்கள் அனைத்து இஸ்ரேலிய துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதோடு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உட்பட 40க்கும் அதிகமானோர் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டு அஷ்டோட் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு GSF தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “இஸ்ரேல் கடற்படையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் வெறித்தனமான விரக்தியின் செயல். கப்பலை தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே இஸ்ரேலிய கடற்படை கப்பல் எங்கள் மீது மோதியது. படகுகள் நீர் பீரங்கியால் தாக்கப்பட்டன” என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதவிர உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இஸ்ரேல் கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா கூறுகையில், “சர்வதேச கடற்பரப்பில் குறுக்கீடு என்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானது. இஸ்ரேலிய கடற்படை மற்ற நாடுகளின் இறையாண்மையையும் மீறுகிறது“ எனத் தெரிவித்தார்.
துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் இந்த கடற்படைக் கடத்தலை “பயங்கரவாதச் செயல்” என்று கண்டித்துள்ளது.
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, அந்நாட்டில் இருந்த இஸ்ரேலிய தூதர்களை வெளியேற்றியுள்ளார். 2020 முதல் நடைமுறையில் உள்ள இஸ்ரேலுடனான கொலம்பியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தையும் நிறுத்தியுள்ளார். மேலும் நிவாரணக் கப்பலில் இருந்த இரண்டு கொலம்பியர்களை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.