தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் பிரியலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தூத்துக்குடியில் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகதான் முதன் முதலில் தேர்தல் களத்துக்கு வந்தது.. கூட்டணிகளைப் பற்றி கவலைப்படுகிற கட்சிகளுக்கு மத்தியில் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்துக்கு வந்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்.
ஜூலை 7-ந் தேதி முதல் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் மீது மட்டுமே அதிமுக நம்பிக்கை வைத்துள்ளதையே இது காட்டுகிறது.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையும்.. இன்னும் காலம் இருக்கிறது..கடைசி நேரத்தில் கூட்டணி வரலாம்.. புதிய கட்சிகள் சேரலாம்.. இருக்கிற கூட்டணி கூட பிரியலாம்..
ஆனால் மக்களை மட்டுமே நம்பி மக்களை சந்திக்கிற ஒரே இயக்கம் அதிமுக. இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.
பாஜக- அதிமுக கூட்டணியில் இருந்து ஏற்கனவே ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனின் அமமுக வெளியேறிவிட்டன. அதேபோல புதிய தமிழகம் கட்சி, விஜய்யின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஜான் பாண்டியனின் தமமுக, திமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கூட்டணியில் உள்ள பாமக- இரண்டாக பிளவுபட்டுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் இருக்கிறது தேமுதிக என்பது குறிப்பிடத்தக்கது.