பாஜக அரவணைத்த அதிமுக நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது..ப.சிதம்பரம் எச்சரிக்கை

Published On:

| By Mathi

P.Chidambaram

பாஜக அரவணைத்துள்ள அதிமுக நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று மார்ச் 4-ந் தேதி நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: தமிழ் நாகரிகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் தமிழைக் காப்பாற்ற வேண்டும். தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பாரதிய ஜனதா கட்சி கண்டிப்பாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு முறையும் பாரதிய ஜனதா கட்சி உங்களைப் பார்த்து ஆதரவு கேட்கும்போது ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு முறையும் தோற்கடிக்க வேண்டும். அவர்கள் பின்னோக்கிப் போகிற அளவுக்கு, நுழையவே முடியாத அளவுக்கு மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்ப தேர்தல் வருது. தேர்தல்ல நமக்குத் தெளிவாக அணிகள் தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலே ஒரு மாபெரும் கூட்டணி, மகா கூட்டணி அமைந்திருக்கிறது. அ.தி.மு.க அஞ்சி அஞ்சி அமித் ஷா மடியில உட்கார்ந்திருக்கு. அது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியா, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியா? இதுல அ.தி.மு.க வேலையே கிடையாது.

ADVERTISEMENT

அ.தி.மு.க கொஞ்சம் பேரை அவுங்க ‘சுவாகா’னு ஒரு வார்த்தை இருக்கு, அ.தி.மு.க நீண்ட நாளைக்கு நிலைத்திருக்க முடியாது. என்னைக்கு பாரதிய ஜனதா கட்சியின் அரவணைப்பிலே போறாங்களோ, அது ரொம்ப நாளைக்கு இருக்க முடியாது. ஆக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலே உள்ள கூட்டணியா, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

இதை திராவிட முன்னேற்றக் கழகம் 4 மாதங்களுக்கு முன்னரே தேர்தல் வேலையை ஆரம்பித்தது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் அயராது பாடுபடுகிறார்கள். நாள்தோறும் பாடுபடுகிறார்கள். வீடு வீடாக, வீதி வீதியாகச் செல்கிறார்கள். இப்ப வீடு வீடாகப் பெண்கள் மட்டும் நேற்று முன்தினத்திலிருந்து செல்கிறார்கள். இந்த வேகத்தை, இந்த வேகத்தைத் தொடர்ந்து இன்னொரு 40 நாளைக்குக் காப்பாற்றி, 40 நாளைக்கு இந்த வேகத்தைச் கொஞ்சம் தளர்ச்சியில்லாமல் இந்த வேகத்தைக் காட்டி, 40 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், இந்தியக் கூட்டணியினுடைய தமிழ்நாடு தலைவர் மு. க. ஸ்டாலினை முதலமைச்சராக அந்த நாற்காலியிலே உட்கார வைத்து தமிழன், தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் நாகரிகம், தமிழ் மண்ணைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share