2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுக அதிகமான இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். AIADMK Edappadi Palaniswami
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை திமுக விமர்சிக்கிறது. அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்கின்றனர். அண்ணா திமுக, பொன்விழா கண்ட கட்சி. தமிழ்நாட்டில் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த கட்சி. எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது.
அண்ணா திமுக இத்துடன் முடிந்து போய்விட்டது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது அவரது பகல் கனவு. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்; அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். நமக்கு பலமான கூட்டணி அமையும். முதல் கட்டமாக தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதன் நோக்கம், வாக்குகள் சிதறாமல் நமது வேட்பாளருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்குதான். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டணி ஆட்சி சர்ச்சை
அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பாஜக இடம் பெறும் என பேசி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என பேசி வருகிறார். இதற்கு மறுப்பு தெரிவிப்பது போல, அதிமுக தனிப்பெரும் பலத்துடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.