அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென அதிமுக ஒன்றுபட வேண்டும் என ‘டோனை’ மாற்றி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
சேலம் ரேடிசன் ஹோட்டலில் ஓபிஎஸ் மைத்துனர் குணசேகரன் மகன் நித்தின்ராகவ்- விசாலி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அளித்த பதில்களும்: என்னை பொருத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பிளவுபட்ட சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும். இதைத்தான் இன்று வரை கூறி வருகிறேன்.
எனக்கு எந்த ஒரு ஆசைகளும் கிடையாது. ஒரு அரசியல் தலைவரின் உச்சபட்ச இலக்கு என்னவென்று ஏற்கனவே ஜெயலலிதா எனக்கு சொல்லி இருக்கிறார். ஆகவே என்னை பொருத்தவரை அதிமுக, ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்; ஜெயலலிதாவின் புகழ் பாடும் ஒரு இயக்கமாகத்தான் இது இருக்க வேண்டும்.
கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையில் இருந்தால் என்னவாகும்?
ஓபிஎஸ்: எனக்கென்று தனிப்பட்ட இலக்கு ஏதும் கிடையாது. ஜெயலலிதா நினைத்தபடி எண்ணத்தின்படி, பல நூற்றாண்டுகள் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு.
கேள்வி: அதிமுக, ஆர்.எஸ்.எஸ். கையில் உள்ளது என விஜய் கூறி இருப்பது பற்றி?
பதில்: இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார் எம்ஜிஆர். அப்படிப்பட்ட தொண்டர் இயக்கமான அதிமுக, ஜெயலலிதாவால் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது ஆகவே அதிமுக என்றுமே மக்கள் இயக்கமாக தான் இருக்கும்.
கேள்வி: முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக முன் நிறுத்துகிறதே?
பதில்: யார் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் முடிவு எடுக்க வேண்டும்; மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு. ஆகவே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.