அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் 40 பேர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 5ம் தேதி செங்கோட்டையன் மனம் திறந்து செய்தியாளர்களிடம் பேசினார். இதற்கு 10 நாள் காலக்கெடு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அதிமுக தலைமை கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொது வெளியில் வெளிபடுத்தியதாக கூறி செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து அறிவித்தது.
செங்கோட்டையனுக்கு பதிலாக முன்னாள் அமைச்சரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.
செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு அதிமுகவில் இருந்து நீக்கபட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என 40 பேர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களான சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, தேவராஜ், ரமேஷ் உள்ளிட்டோரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை, அதிமுகவில் உள்ள குழப்பத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

