அதிமுகவில் உட்கட்சி மோதல் மீண்டும் பகிரங்கமாக வெடித்துள்ளது. இதன் வெளிப்பாடாக, வரும் 5-ந் தேதி தாம் மனம் திறந்து பேச இருக்கிறேன் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்கமாக இன்று அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபிச்செட்டிபாளையத்தில் இன்று (செப்டம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், “கோபிச்செட்டிப்பாளையம் கட்சி அலுவலகத்தில் வரும் 5-ந் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன். அப்போது என்ன கருத்துகளை சொல்லப் போகிறேன் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.. ஆகவே அதுவரை நீங்கள் பொறுத்திருந்து எனக்கு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன், ஜெயலலிதா அமைச்சரவையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தார். தற்போதைய அதிமுக பொதுச்செய்யலாளர் எடப்பாடி பழனிசாமியை விட கட்சியில் சீனியர் செங்கோட்டையன்.
அதிமுகவில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சி அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கிறார் செங்கோட்டையன். கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியை செங்கோட்டையன் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது, சட்டமன்றத்தில் தனித்து செயல்படுவது என தொடர்ந்து தமது அதிருப்தியை காட்டி வந்தார் செங்கோட்டையன்.
பாஜக- அதிமுக கூட்டணி உறுதியான பின்னர் செங்கோட்டையன், அதிருப்தி குரலை வெளிப்படுத்தாமல் இருந்தார். இந்த நிலையில் திடீரென, செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன் என செங்கோட்டையன் அறிவித்துள்ளது அதிமுகவில் மட்டுமல்ல அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.