அதிமுக ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த மருது அழகுராஜ், இன்று (செப்டம்பர் 18) முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடுகளான நமது எம்ஜிஆர் மற்றும் நமது அம்மா நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர் மருது அழகுராஜ். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓபிஎஸ் அணியில் இணைந்து அதன் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டார். பின்னர் ஓபிஎஸ் அணியில் இருந்து ஒதுங்கி, சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக விமர்சித்தார். நடிகர் விஜய்யை சிறிது காலம் தீவிரமாக ஆதரித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் மருது அழகுராஜ். இதனால் அவர் தவெகவில் இணையக் கூடும் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தம்மை திமுகவில் இணைத்துக் கொண்டார் மருது அழகுராஜ்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜ், அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அபகரித்துக் கொண்டார்; எடப்பாடி பழனிசாமியை பாஜக அபகரித்துவிட்டது. அதிமுகவை பெற்றெடுத்த இயக்கம் திமுக. அப்படிப்பட்ட தாய் இயக்கத்தை வழிநடத்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்திருக்கிறேன் என்றார்.