‘ஓரணியில் தமிழ்நாடு’ முழக்கத்தின் கீழ் திமுகவினர் நடத்தி வரும் உறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்களிடம் ஆதார் OTP பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் தாமாக முன்வந்து சேர்த்துள்ளனர். DMK AIADMK
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்து திமுக, 2026 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை, ஆப் App மூலம் நடைபெறுகிறது. இதற்காக ஆதார் OTP பெறப்படுகிறது.
திமுக நிர்வாகிகள், பொதுமக்களிடம் OTP பெறுவதற்கு எதிராக அதிமுக சார்பில் திருப்புவனம் ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை சேகரிக்கக் கூடாது; இந்த விவரங்களைக் கேட்பது தனிநபர் உரிமைக்கு எதிரானது. ஆகையால் திமுகவினர் ஆதார் OTP பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ. மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,
OTP எதற்காக கேட்கப்படுகிறது? OTP விவரங்களைப் பகிரக் கூடாது என போலீசார் விளம்பரம் செய்தும் ஏன் திமுகவினர் கேட்கின்றனர்? வாக்காளர்களின் தனிநபர் விவரங்களைப் பாதுகாப்பது அவசியம். ஆகையால், ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கையின் போது OTP பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது.
அத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச். இவ்வழக்கில் மத்திய- மாநில அரசுகள் 2 வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.